2015-07-30 16:50:00

கிறிஸ்தவத் தம்பதியரின் எடுத்துக்காட்டான வாழ்வு சிறந்த சாட்சி


ஜூலை,30,2015. “கிறிஸ்தவத் தம்பதியரின் எடுத்துக்காட்டான வாழ்வே, திருமணத்திற்கு மிகவும் சக்திவாய்ந்த சாட்சியாக இருக்கின்றது”என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது டுவிட்டர் செய்தியாக இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளார்.

மேலும், இவ்வாண்டில் தொடங்கவிருக்கும் இரக்கத்தின் ஜூபிலி ஆண்டு காலத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிகழ்த்தவிருக்கும் மாபெரும் நிகழ்வுகள் குறித்த விபரங்கள், இந்த ஜூபிலியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

2015ம் ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி அமல அன்னை பெருவிழாவன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதக் கதவைத் திறந்து வைப்பதோடு இந்த ஜூபிலி ஆண்டு ஆரம்பிக்கின்றது.

டிசம்பர் 13ம் தேதி திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறன்று, உரோம் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா, உரோம் புனித பவுல் பசிலிக்கா மற்றும் உலகின் அனைத்துப் பேராலயங்களின் புனிதக் கதவுகள் திறக்கப்படும்.

2016ம் ஆண்டு சனவரி முதல் நாள் வெள்ளிக்கிழமை உலக கத்தோலிக்க அமைதி தினத்தன்று, உரோம் மேரி மேஜர் பசிலிக்காவின் புனிதக் கதவு திறக்கப்படும்.

சனவரி 25ம் தேதி புனித பவுல் மனந்திரும்பிய விழாவன்று உரோம் புனித பவுல் பசிலிக்காவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிற கிறிஸ்தவ சபை பிரதிநிதிகளுடன் வழிபாடு நடத்துவார்.

இந்த ஜூபிலி ஆண்டின் மேலும் பல நிகழ்வுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.