2015-07-30 17:07:00

கருக்கலைப்பு, புறக்கணிப்புக் கலாச்சாரத்தின் எதிரொலி


ஜூலை,30,2015. கருக்கலைப்பு செய்யப்பட்ட குழந்தைகளின் உடல் பாகங்கள், சட்டத்துக்குப் புறம்பே விற்கப்படுவது குறித்த காணொளிப் படங்கள் இப்புதனன்று வெளியாகிவுள்ளவேளை, மனித வாழ்வு மதிக்கப்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார் அமெரிக்க கர்தினால் Seán O’Malley.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் மனித வாழ்வு ஆணைக்குழுத் தலைவரான பாஸ்டன் பேராயர் கர்தினால் O’Malley அவர்கள், கருக்கலைப்பு, ஆதாய மனப்பான்மையின் மற்றும் புறக்கணிப்புக் கலாச்சாரத்தின் எதிரொலி என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

Planned Parenthood அமைப்பு பற்றி வெளியாகியுள்ள காணொளிப் படங்களில், இவ்வமைப்பினர் குழந்தைகளின் உறுப்புகள், பிறப்புறுப்புகள் போன்றவைகள் குறித்து கலந்து பேசுவதாக உள்ளது.

இந்த காணொளி குறித்து அறிக்கை வெளியிட்ட கர்தினால் O’Malley அவர்கள், இந்நடவடிக்கை, கருக்கலைப்பு குறித்தும், கருக்கலைப்பு வழியாக மனித உறுப்புகள் விற்கப்படுவது குறித்தும் தெரிவிக்கின்றன, கருக்கலைப்பு, மனித வாழ்வை நேரிடையாகத் தாக்குவதாகும் என்று கூறினார்.

PPFA என்ற அமெரிக்க ஐக்கிய நாட்டு Planned Parenthood அமைப்பு, ஆண்டுதோறும் ஏறக்குறைய மூன்று இலட்சம் கருக்கலைப்புகளை நடத்துகின்றது.  PPFA அமைப்பு, IPPF என்ற பன்னாட்டு Planned Parenthood கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினராகும். இந்த அரசு-சாரா பன்னாட்டு கூட்டமைப்பு, தாய்-சேய் நலவாழ்வு போன்ற உதவிகளைச் செய்து வருகிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.