2015-07-30 15:58:00

கடுகு சிறுத்தாலும் : மற்றவர்களைப் போல நானும் சாதாரணமானவன்


அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்தபோது வாரணாசியில் உள்ள ஐ.ஐ.டி. பனாரஸ் இந்து பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவ்விழா மேடையில் ஐந்து நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு நாற்காலி மட்டும் அளவில் பெரியதாக இருந்தது. அந்த நாற்காலி கலாம் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதில் அவர் அமர மறுத்துவிட்டு, பல்கலைக்கழக துணை வேந்தரை அமரச் சொன்னார். ஆனால் துணை வேந்தரும் மரியாதை நிமித்தமாக அதில் அமரவில்லை. எனவே, உடனடியாக மற்ற நான்கு நாற்காலிகளின் அளவிலேயே மற்றொரு நாற்காலியும் மேடைக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் கலாம் அவர்கள் அதில் அமர்ந்தார். இவ்வாறு தலைமை நாற்காலியில் அமர மறுத்த மாமனிதர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். குடியரசுத் தலைவராக இருந்தபோதிலும் மற்றவர்களைவிட தன்னை உயர்ந்தவராகக் கருதாமல், மற்றவர்களைப் போல தானும் சாதாரணமானவன் என்று கலாம் அவர்கள் இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டிய நிகழ்வாக இது நினைவு கூரப்படுகிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.