2015-07-30 17:03:00

ஈராக்கிற்கு ஆற்றும் உதவிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி


ஜூலை,30,2015. ஈராக்கின் மனிதாபிமான நெருக்கடிகளைத் தீர்ப்பது எப்படி என்பது குறித்து கலந்தாலோசனை நடத்துவதற்காக, திருப்பீடத்தின் கோர் ஊனும் பிறரன்பு நிறுவனம் வருகிற செப்டம்பரில் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.

வருகிற செப்டம்பர் 17ம் தேதியன்று நடைபெறும் கூட்டத்தில் பிற கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனங்களுடன் சேர்ந்து, போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈராக்கிற்கு உதவுவது குறித்து ஆராயப்படும் என்று, கோர் ஊனும் பிறரன்பு நிறுவனத்தின் செயலர் பேரருள்திரு Giampietro Dal Toso அவர்கள் கூறினார்.

போரை நிறுத்துவதற்கு அரசியல்முறையில் தீர்வு காணப்பட வேண்டுமென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒருபுறம் வலியுறுத்திவரும்வேளை, மறுபுறம், நசுக்கப்படும் மற்றும் புலம்பெயரும் கிறிஸ்தவர்களுக்கு, மனிதாபிமான மற்றும் மேய்ப்புப்பணி உதவிகளைச் செய்யும் வழிகள் குறித்து திருஅவை ஆராய்ந்து வருகிறது என்றும் கூறினார் பேரருள்திரு Dal Toso.

மேலும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் Deus Caritas Est என்ற திருமடல் வெளியிடப்பட்டதன் பத்தாம் ஆண்டு நிறைவுறும்வேளை, அத்திருமடல் குறித்த கருத்தரங்கு ஒன்றையும் கோர் ஊனும் நிறுவனம் நடத்தவுள்ளது என்றும்  பேரருள்திரு Dal Toso அவர்கள் வத்திக்கான் வானொலி தெரிவித்தார்.

Deus Caritas Est திருமடல் குறித்த கருத்தரங்கு வருகிற பிப்ரவரி 25, 26 தேதிகளில் உரோம் நகரில் நடைபெறும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.