2015-07-30 17:16:00

2030க்குள் உலக மக்கள் தொகை 850 கோடியை எட்டும்


ஜூலை,30,2015. 2030ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகை 850 கோடியாகவும், 2050ம்  ஆண்டுக்குள் 970 கோடியாகவும், 2100ம் ஆண்டுக்குள் 1,100 கோடியாகவும் உயரும் என்றும், மக்கள் பெருக்கத்தில் இன்னும் ஏழு ஆண்டுகளில், இந்தியா, சீனாவை விஞ்சிவிடும் என்றும் ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.

2015க்கும் 2050ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உலக மக்கள் தொகையில் பாதிப்பேர், இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ சனநாயக குடியரசு, எத்தியோப்பியா, டான்சானியா, அமெரிக்க ஐக்கிய நாடு, இந்தோனேசியா, உகாண்டா ஆகிய ஒன்பது நாடுகளில் இருப்பார்கள் என்றும் ஐ.நா. அறிக்கை கூறுகிறது.

பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்களுக்கான ஐ.நா. நேரடிப் பொதுச் செயலர் Wu Hongbo அவர்களின் அலுவலகம், உலக மக்கள் தொகை குறித்த இந்த அறிக்கையை    வெளியிட்டுள்ளது.

இவ்வறிக்கையை வெளியிட்டுப் பேசிய Hongbo அவர்கள், இந்த மக்கள் தொகை பெருக்கம், புதிய வளர்ச்சித்திட்ட இலக்குகளை வடிவமைத்து அவற்றை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டுகின்றது என்று தெரிவித்தார்.

தற்போது உலகில் சீனாவும், இந்தியாவும் அதிக மக்களைக் கொண்ட நாடுகளாக உள்ளன. 100 கோடிக்கு மேற்பட்ட மக்களைக் கொண்டுள்ள இந்நாடுகள், உலக மக்கள் தொகையில் 19 மற்றும் 18 விழுக்காடுகளைக் கொண்டுள்ளன.  

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.