2015-07-29 17:10:00

புலிகளைப் பாதுகாத்தால் நீர்வளம், மழையளவு அதிகரிக்கும்


ஜூலை,29,2015. புலிகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உலகம் முழுவதும் ஜுலை 29, இப்புதனன்று உலக புலிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

இத்தினத்தை முன்னிட்டுப் பேசிய வன அலுவலர்கள், ‘புலிகளைப் பாதுகாத்தால், அணைகள், ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். மழையளவு அதிகரிக்கும்’என்று தெரிவித்தனர்.

இந்தியாவின் தேசிய விலங்கு புலி. உலகில் முன்பு 8 வகையான புலி இனங்கள் இருந்துள்ளன. அவற்றில் தற்போது எஞ்சியவை 5 இனங்கள் மட்டுமே. இந்த இனங்களில் தற்போது 4 ஆயிரத்து 600 முதல் 7 ஆயிரத்து 200 புலிகள் மட்டுமே உலகக் காடுகளில் உள்ளன.

இந்தியாவில் உள்ள புலிகள் இனம், ‘ராயல் பெங்கால் டைகர்’ என அழைக்கப்படுகிறது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 40 ஆயிரமாக இருந்தது. அதன்பின், புலிகள் வாழ்விடத்தை அழித்து அவற்றை வேட்டையாடியதால் புலிகள் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டது.

உலக அளவில் மொத்தப் புலிகளின் எண்ணிக்கையில், இந்திய இனம் 60 விழுக்காடு உள்ளது. இந்திய இன புலிகள், இந்தியா, நேபாளம், பூட்டான் மற்றும் வங்கதேசத்தில் காணப்படுகின்றன. இதில் இந்தியக் காடுகளில் மட்டுமே 70 விழுக்காடு புலிகள் காணப்படுகின்றன.

வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி, புலிகள் காப்பகத்தில்தான் உருவாகிறது. இதுதவிர, மணிமுத்தாறு, சேர்வலாறு, ராமநதி, கடனா நதிகள், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில்தான் உருவாகின்றன.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.