2015-07-29 15:56:00

அமைதி ஆர்வலர்கள் : 1991ல் நொபெல் அமைதி விருது


ஜூலை,29,2015. அச்சம் என்பது மடமையடா. அஞ்சாமை திராவிடர் உடமையடா.  ஆறிலும் சாவு, நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா என்று கவியரசர் கண்ணதாசன் எழுதினார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.அவர்கள் இசையமைத்து டிஎம்எஸ் அவர்கள் பாடினார். அச்சம் தவிர்த்து வாழுங்கள், அச்சம் தவிர்த்து நேர்மையுடன் செயல்படுங்கள், அச்சம் தவிர்த்து உண்மையைப் பேசுங்கள் என்று நமக்குச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. எத்தனை ஆண்டுகள் சிறைவாழ்வை அனுபவித்தாலும் தாயகத்தில் மக்களாட்சியைக் கொண்டுவருவதில் அச்சம் தவிர்த்து உறுதியுடன் செயல்பட்டவர் மியான்மார் ஆங் சான் சூச்சி அவர்கள். மியான்மார் நாட்டின் சனநாயக ஆதரவு எதிர்க்கட்சித் தலைவரான இவருக்கே 1991ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. இவரின் கூற்றுக்களை இணையத்தில் சொடுக்கினால், அச்சம் தவிர் என்ற சொற்களே முதலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தென்னாப்ரிக்க நெல்சன் மண்டேலா அவர்கள் போன்று, ஆங் சான் சூச் சி அவர்களும் அடக்குமுறைக்கு மத்தியில் அமைதியாகப் போராடியவராக அனைத்துலக அளவில் நோக்கப்படுகிறார். ஆங் சான் சூச்சி அவர்கள் சொல்லியுள்ளார்....

“அச்சம் என்பது ஒரு பழக்கம், நான் பயப்படவில்லை”.

 “நீ சரியானது என்று நினைப்பதைச் செய்வதிலிருந்து உன்னை தடுப்பதற்குப் பயத்தை ஒருபோதும் அனுமதியாதே”.

 “அதிகாரம் அல்ல, பயமே நம்மைச் சீரழிக்கின்றது”.

“உண்மையான ஒரே சிறை, பயமே. உண்மையான ஒரே விடுதலை பயத்திலிருந்து விடுதலை அடைவதே”.

 “ஏற்கனவே விடுதலை அடைந்தவர்கள் மற்றும் சுதந்திரம் மறுக்கப்பட்டவர்களால் சுதந்திரம் வலியுறுத்தப்பட வேண்டும் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டும்”.

 “நீ ஆதரவற்று இருப்பதாக உணர்ந்தால் பிறருக்கு உதவி செய்”

மியான்மார் மக்களால் Daw Suu அதாவது ஆன்டி சூ என்றும் Amay Suu அதாவது அன்னை சூ என்றும் செல்லமாக அழைக்கப்படும் ஆங் சான் சூச்சி அவர்கள்,  1945ம் ஆண்டு சூன் 19ம் தேதி பிறந்தார். அக்காலத்தில் பர்மா என அழைக்கப்பட்ட மியான்மார் பிரித்தானியரின் காலனியாக இருந்தபோது, இவரது தந்தை ஆங் சான், பிரித்தானியப் பர்மாவில் பிரதமராக இருந்தார். எனினும், சூச்சிக்கு 2 வயது நடந்தபோது 1947ம் ஆண்டில் இவரது தந்தை கொலை செய்யப்பட்டார். இவரது தாய் Khin Kyiன் பராமரிப்பில், சூச்சியும், அவரது இரு சகோதரர்களும் வளர்ந்தனர். 1948ம் ஆண்டு சனவரி 4ம் தேதி பிரித்தானிய பர்மா சுதந்திரம் அடைந்து புதிய அரசு உருவாக்கப்பட்டபோது இவரது தாய் கின் கி அவர்கள் முக்கிய அரசியல் நபராக இருந்தார். 1960ல் இந்தியா மற்றும் நேபாளத்திற்கு பர்மியத் தூதராக கின் கி அவர்கள் நியமிக்கப்பட்டார். அதனால் தனது தாயுடன் இந்தியா சென்ற சூச் சி அவர்களும், புதுடெல்லி இயேசு மரி பள்ளியில் படித்த பின்னர், ஸ்ரீராம் கல்லூரியில் அரசியலில் பட்டயப் படிப்பை முடித்தார். பின்னர் ஆக்ஸ்ஃபோர்டில் 1969ல் மெய்யியல், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டயக் கல்வியை முடித்தார். நியுயார்க் ஐ.நா. அலுவலகத்திலும் பணியாற்றிய சூச்சி, 1972, சனவரி முதல் தேதி Michael Aris என்பவரைத் திருமணம் செய்தார். பிரித்தானியரான Michael Aris திபெத்திய, பூட்டான் பண்பாட்டு ஆய்வாளரும் அறிஞருமாவார். இவர்களுக்கு இரு மகன்கள் பிறந்தனர்.

பர்மாவில் சூச்சியின் தாய் கடின நோயால் இறந்து கொண்டிருந்ததால் அவரைப் பார்ப்பதற்கு 1988ம் ஆண்டில் பர்மா சென்றார். அங்கேயே தங்கிவிட்ட சூச்சி, பர்மிய சர்வாதிகாரி U Ne Win அவர்களின் அடக்குமுறையைப் பார்த்து அதற்கு எதிராகவும், மனித உரிமைகளுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார். நாட்டில் சனநாயக ஆதரவு கட்சியையும் தொடங்கினார். 1989ம் ஆண்டில் சூச் சி அவர்களை பர்மிய இராணுவ அரசு வீட்டுக் காவலில் வைத்தது. இவர் தனது கணவர் ஏரிசை 1995, கிறிஸ்மஸ் அன்றே கடைசியாகப் பார்த்தார். ஏரிசுக்கு விசா வழங்குமாறு, அப்போதைய ஐ.நா. பொதுச் செயலர் Kofi Annan, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் உட்பட பலர் பர்மிய அரசைக் கேட்டுக்கொண்டனர். ஆனால் பர்மிய இராணுவ அரசு மறுத்துவிட்டது. சூச்சியின் வீட்டுக் காவலை மட்டும் தற்காலிகமாக அரசு இரத்து செய்தது. ஆனால் நாட்டைவிட்டு வெளியேறினால் மீண்டும் நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படும் என்ற பயத்தால் சூச் சி நாட்டைவிட்டு வெளியேறவில்லை. தனது கணவரையும் பார்க்கவில்லை. பின்னர் அவரது கணவர் Aris தனது 53வது வயதில் 1999ல் புற்றுநோயால் இறந்தார்.   

சூச்சி அவர்கள் 15 ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்துள்ளார். இவருக்கு 1990ல், Rafto பரிசு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான Sakharov விருதும் வழங்கப்பட்டன. 1991ல் நொபெல் அமைதி விருதையும், 1992ல் இந்திய அரசின்  ஜவகர்லால் நேரு அமைதிப் பரிசையும், வெனெசுவேலா நாட்டின் Simón Bolívar விருதையும் பெற்றார். 2007ல், கானடா அரசு கவுர குடிமகளாக, சூச்சியை ஆக்கியது. இந்தச் சலுகையைப் பெற்ற நான்காவது ஆள் இவர். 2011ல் Wallenberg பதக்கம் வழங்கப்பட்டது. 2012ல் அமெரிக்க காங்கிரஸ் பதக்கமும், அமெரிக்க சுதந்திர அரசுத்தலைவர் தங்கப் பதக்கமும் கிடைத்தன. 1990ல் மியான்மாரில் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் இவரது கட்சி பெரும்பான்மையான இடங்களை வென்றது. ஆங் சான் சூச்சியின் தேசிய மக்களாட்சி கட்சியான நாடின் 59 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தின் மொத்த இடங்களில் 81 விழுக்காட்டு இடங்களை (485 மொத்த இடங்களில் 392 இடங்களை) வென்றது. ஆனாலும் இவர் தேர்தலுக்கு முன்னரே வீட்டுக்காவல் சிறையில் அடைக்கப்பட்டதால் நாட்டின் பிரதமராக முடியவில்லை. ஆங் சான் சூச்சி வெளிநாட்டுக்காரரை மணம் செய்து கொண்டதால் அவருக்கு அரசியலில் ஈடுபட தகுதி இல்லை என்றும் அரசு அறிவித்து விட்டது. ஜூலை 20, 1989 முதல் நவம்பர் 10, 2010 வரையிலான 21 ஆண்டுக் காலத்தில் 15 ஆண்டுகள் இவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

ஆங் சான் சூச்சி, மக்களாட்சி ஆதரவாளர், மியான்மாரில் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பின் தலைவரும் ஆவார். மக்களாட்சியை நாட்டில் ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர், தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் செலவழித்தார். இவர் மியான்மாரின் சனநாயக ஆதரவாளராக நோக்கப்படுகிறார். 2015ம் ஆண்டின் அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.