2015-07-28 15:11:00

31வது உலக இளையோர் தினத்திற்கு கர்தினால் ரில்கோ செய்தி


ஜூலை,28,2015. 2016ம் ஆண்டில் கிராக்கோவ் நகரில் நடைபெறவிருக்கும் 31வது உலக கத்தோலிக்க இளையோர் தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ளார் திருப்பீட பொதுநிலையினர் அவைத் தலைவர் கர்தினால் ஸ்தனிஸ்லாவ் ரில்கோ.

இவ்வாண்டு டிசம்பர் 8ம் தேதி தொடங்கும் இரக்கத்தின் ஜூபிலி ஆண்டு காலத்தில் இடம்பெறவிருக்கும் உலக கத்தோலிக்க இளையோர் தினம், அனைத்துலக இளையோரின் ஜூபிலி விழாவாக, இறைவனின் இரக்கத்தை மையப்படுத்தியதாய் இருக்கும் என்று கூறியுள்ளார் கர்தினால் ரில்கோ.

உலக கத்தோலிக்க இளையோர் தினம், போலந்தில், இரண்டாவது முறையாக நடைபெறவுள்ளது. முதலில் 1991ம் ஆண்டு, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் தலைமையில் செஸ்டகோவா அன்னை மரியா திருத்தலத்தில் நடைபெற்றது. இம்முறை, இறைஇரக்க திருத்தலத்திலுள்ள புனிதர் பவுஸ்தினா கோவால்ஸ்கா அவர்கள் கல்லறையை இளையோர் தரிசிக்கும்போது, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் ஆன்மீக முறையில் பிரசன்னமாய் இருப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் ரில்கோ.

31வது உலக கத்தோலிக்க இளையோர் தினத்தின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உட்பட பலர் ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுவார்கள்.

இறைஇரக்க திருத்தலத்தில் அடையாளப்பூர்வ புனிதக் கதவு அமைக்கப்படும், ஜூலை 30ம் தேதி சனிக்கிழமை இப்புனிதக் கதவு வழியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்று திருவிழிப்பையும், திருநற்கருணை ஆராதனை பக்தி முயற்சியையும் ஆரம்பித்து வைப்பார்.

இத்தினத்தின் இறுதி நாளான ஜூலை 31, ஞாயிறன்று, 5 கண்டங்களைச் சேர்ந்த 5 இளையோர்க்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எரியும் 5 விளக்குகளை அளிப்பார். இந்த உலக தினத்தில் பங்கு கொள்ளும் அனைவரும், இறைவனின் இரக்கத்தின் மறைப்பணியாளர்களாக உலகெங்கும் செல்ல வேண்டும் என்பதன் அடையாளமாக இந்த எரியும் விளக்குகள் அளிக்கப்படும் என கர்தினால் ரில்கோ அவர்களின் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.