2015-07-25 16:09:00

பிரேசிலின் வீடற்ற மக்களின் பரிசுகளுக்கு திருத்தந்தை நன்றி


ஜூலை,25,2015. “கிறிஸ்தவச் சான்று உண்மையானதாக இருக்க வேண்டும், செயல்கள் அற்ற சொற்கள் வெறுமையே”என்ற வார்த்தைகளை, இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், பிரேசில் நாட்டின் வீடற்ற மக்கள் அனுப்பியிருந்த பரிசுகளுக்கு நன்றி தெரிவித்து காணொளிச் செய்தி ஒன்றை அவர்களுக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சா பவுலோ உயர்மறைமாவட்டத்தின் வீடற்ற மக்கள், சுழற்சி முறையில் பயன்படுத்தப்படும் பொருள்களைக் கொண்டு ஒரு சிலுவை மற்றும் ஒரு செபமாலை செய்து அவற்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அனுப்பியிருந்தனர்.

வீடற்ற மக்களின் இப்பரிசுப் பொருள்களைத் தொட்டபோது வீடற்ற ஒவ்வொரு மனிதரையும் தொட்டது போன்ற உணர்வு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ள திருத்தந்தை, அம்மக்களுக்குத் தனது ஆசிரையும் அளித்துள்ளார்.

2010ம் ஆண்டின் புள்ளி விபரங்களின்படி, பிரேசில் மக்கள் தொகையில் ஏறக்குறைய ஆறு விழுக்காட்டினர், அதாவது அந்நாட்டின் 19 கோடி மக்களுள் ஒரு கோடியே 14 இலட்சம் பேர் சேரிகளில் வாழ்கின்றனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.