2015-07-25 16:56:00

தகவல்தொழில்நுட்பம் சார்ந்த தயாரிப்புகளில் தடையற்ற வர்த்தகம்


ஜூலை,25,2015. நூறாயிரம் கோடி டாலர் மதிப்பிலான தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தயாரிப்புகளுக்கு இறக்குமதி வரியை நீக்குவதற்கான ஒப்பந்தத்தை, WTO உலக வர்த்தக நிறுவனம் உறுதி செய்துள்ளது.

உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பினர்கள் இவ்வெள்ளியன்று ஜெனீவாவில் நடத்திய கூட்டத்தில், வரியில்லாமல் இறக்குமதி செய்வதற்கான தகவல் தொழில்நுட்ப தயாரிப்புகளின் ஒப்பந்தப் பட்டியலில் மேலும் 200 தயாரிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

18 ஆண்டுகள் பழமையுடைய தகவல்தொழில்நுட்பம் சார்ந்த இந்த ஒப்பந்தத்தில் உலக வர்த்தக நிறுவனம் மாற்றம் செய்துள்ளது.

வீடியோ கேம்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களைத் தயாரிப்பவர்களுக்கு இந்த ஒப்பந்தம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இரும்பு, எஃகு, துணி, ஆடைகள் ஆகியவற்றில் நடக்கும் ஒட்டுமொத்த வர்த்தகத்தின் மதிப்பு இது என உலக வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதத்திற்குள் இந்த ஒப்பந்தம் முழுமையாக உறுதிப்படுத்தப்படும்.

இதற்கு முன்பாக, 1996ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐ.டி. ஒப்பந்தம் என்ற ஒப்பந்தமே தகவல் தொழில்நுட்பத்தில் நடக்கும் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தி வந்தது.

உயர்தொழில்நுட்பம் கொண்ட கணனி சிப்புகள், ஜிபிஎஸ் கருவிகள், மருத்துவ உபகரணங்கள், பிரிட்டர்களுக்கான கேட்ரிட்ஜுகள், வீடியோ கேம்கள் போன்றவை இந்தப் புதிய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஜெனரல் எலெக்ட்ரிக், இன்டெல், டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட், மைக்ரோசாஃப்ட், நின்தென்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் பயனடையும் என நம்பப்படுகிறது.

ஆதாரம் : பிபிசி / Reuters/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.