2015-07-24 16:50:00

திருஅவையின் எதிர்காலம் ஆசியாவில் உள்ளது,திருத்தந்தை


ஜூலை,24,2015. திருஅவையின் எதிர்காலம் ஆசியாவில் உள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னிடம் கூறியதாக, பிலிப்பைன்ஸ் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் இந்தியாவில் தெரிவித்தார்.

இந்தியாவின் பங்களூரு பாப்பிறை இறையியல் கல்லூரியில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய, 58 வயது கர்தினால் தாக்லே அவர்கள், அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத் தலைவர் பொறுப்பிலிருந்து தன்னை நீக்கிவிடுமாறு திருத்தந்தையிடம் கேட்டபோது, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததோடு, இத்தகைய பொறுப்புகளில் ஆசியர்கள் இருக்க வேண்டும், ஏனெனில், திருஅவையின் எதிர்காலம் ஆசியாவில் உள்ளது என்று கூறியதாகத் தெரிவித்தார்.

ஆசியத் திருஅவையின் உறுப்பினர்களாகிய நாம் நமது பணியை கவனமுடன் ஏற்று, உலகளாவியத் திருஅவைக்கு எவ்விதத்தில் நாம் உதவ முடியும் என்பதைச் சிந்திக்க  வேண்டுமென்றும் கூறினார் மனிலா கர்தினால் தாக்லே.

இக்காலத்தில் ஆப்ரிக்கா, ஆசியா, ஓசியானியா போன்ற பகுதிகளில் திருஅவை பரவிவரும் வேளை, சிந்தனை, ஆய்வு மற்றும் பெரும் மறைப்பணியின் வழியாக உலகளாவியத் திருஅவைக்கு நாம் உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் கர்தினால் தாக்லே.

ஆதாரம் : Matters India / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.