2015-07-23 16:32:00

ஜாம்பியாவில் மரண தண்டனை கைதிகளுக்கு ஆயுள் தண்டனை


ஜூலை,23,2015. ஆப்ரிக்க நாடான ஜாம்பியா அரசுத்தலைவர் Edgar Lungui அவர்கள், அந்நாட்டின் 332 மரண தண்டனை கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியிருப்பதை வரவேற்றுள்ளனர் ஐ.நா. அதிகாரிகள்.

மரண தண்டனைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும் ஐ.நா. அதிகாரி Christof Heyns, சித்ரவதைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும் ஐ.நா. அதிகாரி Juan E. Méndez ஆகிய இருவரும் ஜாம்பிய அரசின் இந்நடவடிக்கையை வரவேற்றுள்ளதோடு, அந்நாட்டுச் சட்டங்களில் மரண தண்டனை குறித்த குறிப்புகளை நீக்கி விடுவதற்கு முயற்சிக்குமாறு கேட்டுள்ளனர்.

ஜாம்பியாவில் அதிகபட்ச பாதுகாப்பு கொண்ட Mukobeko சிறையைப் பார்வையிட்ட பின்னர், 332 மரண தண்டனை கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியிருக்கிறார் அரசுத்தலைவர் Lungui.

51 கைதிகளுக்கே இடமிருக்கும் Mukobeko சிறையில் நூற்றுக்கணக்கான கைதிகள் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஐ.நா.பொதுச் செயலரும், மரண தண்டனை நிறைவேற்றுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு 21ம் நூற்றாண்டில் இடமே இல்லை என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.