2015-07-23 16:23:00

உலகில் மிக வலுவான நன்னெறிக் குரல் திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூலை,23,2015. இன்றைய உலகில் மிக வலுவான நன்னெறிக் குரலாக விளங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகள் ஊக்கமூட்டுவதாகவும், உள்தூண்டுதல் தருவதாகவும் உள்ளன என்று நியுயார்க் மேயர் கூறினார்.

"நவீன அடிமைத்தனமும், காலநிலை மாற்றமும்:மாநகரங்களின் அர்ப்பணிப்பு" என்ற தலைப்பில், இப்புதனன்று வத்திக்கானில் நிறைவடைந்த பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் சந்தித்துள்ள நியுயார்க் மேயர் Bill de Blasio அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

பாப்பிறை அறிவியல் கழகம் நடத்திய இக்கருத்தரங்கு சிறப்பான ஒரு நிகழ்வு என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைத்துவத்தின் புதிய முறையை, குறிப்பாக, உலகின் பல பகுதிகளிலிருந்து மாநகர மேயர்களை வரவழைத்ததன் வழியாக, தலைமைத்துவத்தின் புதிய வடிவத்தை எங்களுக்குக் காட்டினார் என்றும் கூறினார் de Blasio.

காலநிலை மாற்றம் மற்றும் மனித வர்த்தகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க விரும்பும் உலகின் முக்கிய அரசியல் தலைவர்கள் அந்நடவடிக்கையில் உடனடியாக ஈடுபட வேண்டுமென்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார் என்றும் கூறினார் நியுயார்க் மேயர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலாளித்துவ அமைப்புமுறை விவகாரங்கள் குறித்து அஞ்சாமல் பேசுகிறார் என்றும், இன்றைய உலகம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் திருத்தந்தையின் ஆதரவு இருப்பது ஊக்கமளிக்கின்றது என்றும் கூறினார் நியுயார்க் மேயர் de Blasio.

ஜூலை 21, 22 தேதிகளில் பாப்பிறை அறிவியல் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த அனைத்துலக கருத்தரங்கில், 65க்கும் மேற்பட்ட மாநகர மேயர்களும், ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.