2015-07-23 16:37:00

Alzheimer நோயின் வேகத்தைக் குறைக்கும் புதிய மருந்து


ஜூலை,23,2015. Alzheimer நோயால் துன்புறுவோருக்கு அவர்களின் மூளையில் ஏற்படும் பாதிப்புகளின் வேகத்தைக் குறைக்கவல்ல ஒரு புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

Eli Lilly என்கிற மருந்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில், solanezumab என்ற இந்த புதிய மருந்து, டிமென்ஷியா நோய் முன்னேறும் வேகத்தை ஏறக்குறைய 33 விழுக்காடு குறைக்கும் என்று தெரிவிக்கிறது. அதாவது இந்தக் குறிப்பிட்ட மருந்தை, பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நோய்த் தாக்கத் துவங்கிய ஆரம்ப கட்டத்திலேயே கொடுத்தால் இந்த அளவுக்கு பலன்கள் கிடைக்கும் என்கிறது இந்த ஆய்வு.

இம்மருந்தைக் கொண்டு இதற்கு முன்பு 2012ம் ஆண்டு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் இது பெருமளவு தோல்வியில் முடிந்ததாகவே கூறப்பட்டது. Alzheimer நோயின் ஆரம்பகாலத் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மற்றும் நோயின் தாக்கம் ஓரளவு பரவத்துவங்கியவர்கள் மத்தியில் அந்தப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

ஆனால் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் புதிய முடிவுகள், இம்மருந்தைப் பயன்படுத்தியவர்கள் மத்தியில் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் கணக்கில் கொண்டு வெளியிடப்பட்டிருக்கின்றன.

தீவிரத்தன்மை குறைந்த Alzheimer நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் இந்த மருந்து எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது என்பதை இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பரிசோதனை செய்ததில் கிடைத்த முடிவுகளே தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

வாஷிங்டனில் நடந்துவரும் Alzheimer நோய் தொடர்பான அனைத்துலக மாநாட்டில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.

மூளை பாதிப்பால் நினைவு மறதி உள்ளிட்ட பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் Alzheimer நோய், உலகெங்கிலும் கோடிக்கணக்கானோரை பாதித்துள்ளது.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.