2015-07-22 15:56:00

மாற்றங்களை உருவாக்கும் சக்தி பெற்றவர், திருத்தந்தை


ஜூலை,22,2015. சமுதாயப் பிரச்சனைகளையும், அதனால் உருவாகும் காலநிலை மாற்றங்களையும் சீரமைக்க மனித இயக்கங்கள் தேவை என்றும்,  அத்தகைய இயக்கங்களை வழிநடத்தக் கூடியவர் திருத்தந்தை பிரான்சிஸ் என்றும், இந்தியாவின் மாநகர மேயர் ஒருவர் கூறினார்.

"நவீன அடிமைத்தனமும், காலநிலை மாற்றமும்: மாநகரங்களின் அர்ப்பணிப்பு" என்ற தலைப்பில், பாப்பிறை அறிவியல் கழகம், ஜூலை 21 மற்றும் 22 ஆகிய இரு நாட்கள், வத்திக்கானில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருந்த கொச்சி மாநகர மேயர் டோனி சம்மனி (Tony Chammany) அவர்கள் Zenit கத்தோலிக்க நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

கத்தோலிக்கத் திருஅவை, இவ்வுலகெங்கும் பரவியுள்ள ஓர் இயக்கம் என்ற கண்ணோட்டத்தில் சிந்திக்கும்போது, அதன் தலைவராக விளங்கும் திருத்தந்தை உலகெங்கும் மாற்றங்களை உருவாக்கும் சக்தி பெற்றவர் என்று சுட்டிக்காட்டிய மேயர் சம்மனி அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறும் கருத்துக்கள், கத்தோலிக்கர்களால் மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு மக்களாலும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது என்று எடுத்துரைத்தார்.

மாநகர மேயர்களுக்கு மதிப்பளித்து அவர்களை அழைத்து வத்திக்கான் நடத்தும் இந்தக் கருத்தரங்கினால், பல மாநகரங்களின் மேயர்கள், தங்கள் கடமைகளை இன்னும் தீவிரமாக நிறைவேற்ற முன்வருவர் என்று மேயர் சம்மனி அவர்கள், தன் நம்பிக்கையை வெளியிட்டார்.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.