2015-07-22 15:33:00

"Laudato Si”மனிதர்களை உள்ளடக்கிய சமுதாயத் திருமடல்


ஜூலை,22,2015. தான் எழுதியுள்ள “Laudato Si” திருமடல், இயற்கையைப் பற்றி மட்டும் பேசும் ஒரு 'பசுமை'த் திருமடல் அல்ல, மாறாக, மனிதர்களை உள்ளடக்கிய ஒரு சமுதாயத் திருமடல் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில் நடைபெற்ற ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் கூறினார்.

உலகின் பல்வேறு பெருநகரங்களின் மேயர்களுக்கென வத்திக்கானில் நடைபெற்ற ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருந்த 65க்கும் மேற்பட்ட மேயர்களை, இச்செவ்வாய் பிற்பகல் சந்தித்தத் திருத்தந்தை, இயற்கைப் பாதுகாப்பையும், மனிதப் பாதுகாப்பையும் பிரித்துப் பார்க்க முடியாது என்று தன் உரையில் குறிப்பிட்டார்.

காலநிலை மாற்றம், அதனால் உருவாகும் இயற்கை இடர்கள், அதனால் குடிபெயரும் மக்கள், அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் என்று, ஒரு தொடர் சங்கிலியாக வளரும் துன்பங்களால், இயற்கையில் ஏற்படும் மாற்றங்களை மனித சமுதாய மாற்றங்களிலிருந்து பிரித்துக் காண்பது இயலாது என்று திருத்தந்தை தன் உரையில் கூறினார்.

இன்று நம்மிடையே உருவாகியுள்ள காலநிலை மாற்றங்களும், வேலையில்லாத் திண்டாட்டங்களும் இளையோரை மனமிழந்து போகச் செய்வதால், அவர்கள் போதைப்பொருள், தற்கொலை என்ற மிகத் துன்பகரமான முடிவுகளைத் தேடுவதைத் தடுப்பது, நமக்கு முன் உள்ள ஒரு மாபெரும் சவால் என்று திருத்தந்தை வலியுறுத்திப் பேசினார்.

தொழில்நுட்பம், இயந்திரங்களைச் சார்ந்த வாழ்வு என்பவை, நாம் அனுபவித்துவரும் புதுவகை நோய்கள் என்று குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயந்திரங்களின் தொடர் செயல்பாடுகளுக்காக காடுகள் அழிக்கப்படுவது, சுற்றுச் சூழலுக்கு நாம் செய்யும் மிகப்பெரும் அநீதி என்று சுட்டிக்காட்டினார்.

நகரங்களில் வளர்ந்துவரும் அழிவுக் கலாச்சாரத்தைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பு, மாநகர மேயர்களின் முதன்மையான கடமை என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில் வலியுறுத்தினார்.

"நவீன அடிமைத்தனமும், காலநிலை மாற்றமும்: மாநகரங்களின் அர்ப்பணிப்பு" என்ற தலைப்பில், பாப்பிறை அறிவியல் கழகம் ஜூலை 21 மற்றும் 22 ஆகிய இரு நாட்கள் வத்திக்கானில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கிற்கு, மாநகர மேயர்களை அழைத்திருந்தது இதவே முதல் முறை என்பது குறிப்பிடத் தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.