2015-07-21 15:45:00

முதியோரின் உரிமைகள் மதிக்கப்படுவதற்கு திருப்பீடம் அழைப்பு


ஜூலை,21,2015. இக்காலத்தில் வயதானவர்கள் எண்ணிக்கையும், மக்களின் சாரசரி ஆயுள்காலமும் அதிகரித்துவரும்வேளை, வயதானவர்கள் ஏற்கப்பட்டு அவர்கள் சமுதாயத்தில் மேலும் நன்றாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. கூட்டம் ஒன்றில் கேட்டுக்கொண்டார் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.

வயதானவர்கள் குறித்து நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற அமர்வில் உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தப் பார்வையாளர் பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள், எண்ணிக்கையில் அதிகரித்துவரும் வயதானவர்கள், நலவாழ்வு மற்றும் சமூக அமைப்புகளுக்கு முன்வைக்கும் சவால்களையும் குறிப்பிட்டார்.

உலகின் மேற்கில் இந்த நூற்றாண்டு, முதியோர் நூற்றாண்டு என புள்ளி விபரங்கள் காட்டுகின்றன, சிறார் குறைந்தும், முதியோர் அதிகரித்தும் வருகின்றனர், தற்போது உலக மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினர் அதாவது 70 கோடிப் பேர் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள், 2050ம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை இரண்டு மடங்காகும் என்றுரைக்கும் புள்ளி விபரங்களையும் சுட்டிக்காட்டினார் பேராயர் அவுசா.

வயதானவர்கள் புறக்கணிப்படும் முறையைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டதையும் கோடிட்டுக் காட்டினார் பேராயர் அவுசா.

வயதானவர்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதில் பெரிய இடைவெளி காணப்படுவதால், இவர்களின் உரிமைகள் முழுமையாய் மதிக்கப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு கேட்டுக்கொண்டார் திருப்பீட அதிகாரி பேராயர் அவுசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.