2015-07-21 16:07:00

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிக்கப்பட பிரான்சிஸ்கன் சபைகள்


ஜூலை,21,2015. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிக்கப்படுவதற்குத் தீவிர முயற்சியில் ஈடுபடவுள்ளது இந்திய பிரான்சிஸ்கன் கழகம்.

புனித பிரான்சிஸ் அசிசியாரின் ஆன்மீகத்தைப் பின்பற்றும், இந்தியாவிலுள்ள  பிரான்சிஸ்கன் சபைகளின் கழகம் வருகிற செப்டம்பர் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை போபாலில் நடத்தும் மாநாட்டில், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிக்கப்படுவதற்குச் செயல் திட்டங்களை வகுக்கவுள்ளது.

இந்தியாவில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவதால் இதனை தடுத்து நிறுத்துவது காலத்தின் கட்டாயம் என்று, AFFI என்ற இந்திய பிரான்சிஸ்கன் கழக ஒருங்கிணைப்பாளர் அருள்பணி நித்திய சகாயம் அவர்கள் கூறினார்.

தேசிய குற்றத் தடுப்பு அலுவலக அறிக்கையின்படி, குடும்பத்தில் ஒவ்வொரு நாளும் 45 விழுக்காட்டுப் பெண்கள் அடிக்கப்படுகின்றனர், அடிக்கப்படும் பெண்களில் 75 விழுக்காட்டினர் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர் மற்றும் 55 விழுக்காட்டுப் பெண்கள்  சாதாரணமாக வன்முறையை எதிர்கொள்கின்றனர்.

இந்தியாவில் பாலின வன்கொடுமை அதிகரித்து வருகிறது. மேலும், கேரளாவில்  2015ம் ஆண்டு சனவரி முதல் ஏப்ரல் வரையிலான 120 நாட்களில் 391 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளன என்று இச்செவ்வாயன்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.