2015-07-21 15:40:00

நலிந்தவர்களைப் பராமரிப்பதற்கு திருஅவை அழைக்கப்பட்டுள்ளது


ஜூலை,21,2015. “நலிந்தவர்கள் மீது எப்போதும் மிகுந்த கவனம் செலுத்தி அவர்களைப் பராமரிப்பதற்கு திருஅவை அழைக்கப்பட்டுள்ளது”என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், குரோவேஷிய நாட்டின் Sinj அற்புத அன்னை திருத்தலத்தின் 300ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் தனது பிரதிநிதியாக கலந்து கொள்வதற்கு, சாக்ரெப் கர்தினால் யோசிப் போஜானிஷ் அவர்களை இச்செவ்வாயன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குரோவேஷிய நாட்டின் Spalato-Makarska உயர்மறைமாவட்டத்திலுள்ள Sinj அற்புத அன்னை திருத்தலத்தின் 300ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள், வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறவுள்ளன. 

Sinj அற்புத அன்னை திருத்தலத்தில் உள்ள இரக்கத்தின் அன்னமரியா ஓவியம் 16ம் நூற்றாண்டில் வெனிஸ் கலைஞரால் வரையப்பட்டது. 1536ம் ஆண்டில் Sinj நகரத்தை  துருக்கியர் கைப்பற்றினர். அச்சமயத்தில் இந்த ஓவியம் இங்கிருந்து அகற்றப்பட்டு எர்செகொவினா குடியரசுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே 1687ம் ஆண்டுவரை வைக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டு வந்தது. 1715ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி துருக்கியர்கள் Sinj நகரைத் தாக்கினர். இச்சண்டை அவ்வாண்டு ஆகஸ்ட் 15ம் தேதி முடிந்தது. அச்சண்டையில் குரோவேஷியப் படைகள், துருக்கியப் படைகளைவிட குறைவாகவே இருந்தாலும், குரோவேஷியர்களே வெற்றியடைந்தனர். இது Sinj அன்னை மரியாவின் அற்புதச் செயலே என்று குரோவேஷியர்கள் நம்பினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.