2015-07-21 16:15:00

இலங்கை அரசியலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தேவை


ஜூலை,21,2015. இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெண் வேட்பாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் தர வேண்டுமென்று அந்நாட்டின் பெண்கள் விவகார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளவேளை, பெண் வேட்பாளர்களுக்கு குறைவான வாய்ப்புகளே தரப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.

இலங்கையின் மக்கள்தொகையில் பெண்களே அதிகமாக இருந்தாலும், தேர்தல் என்று வரும்போது அவர்களுக்கு மிகக் குறைந்த அளவு வாய்ப்புகளே அளிக்கப்படுகின்றன.

இலங்கை நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை, தொடர்ச்சியாக ஐந்து விழுக்காடு அளவுக்கே இருந்துள்ளது என பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என பல அரசியல் கட்சிகள் நீண்ட காலமாகக் கூறிவந்தாலும், அது நடைமுறைபடுத்தப்படுவதில்லை என்றும், பெண்கள் வாக்கு வங்கிகளாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும் பொதுமக்கள் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர்.

இதற்கிடையே, அனைத்து அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களில் குறைந்தது முப்பது விழுக்காட்டினர் பெண்களாக இருக்க வேண்டுமென பெண்கள் விவகார அமைச்சகம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.  

இலங்கையில் கடந்த நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 5.8 விழுக்காடாகும். 

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.