2015-07-20 16:38:00

வாரம் ஓர் அலசல் – பிறர்வாழ தன்னுயிர் தந்து....


ஜூலை,20,2015. அந்த 12 வயதுச் சிறுவன் ஒருவன், தனது நாட்டுக் குற்றக்கும்பலின் கொலை வெறித் தாகத்தைத் தணிக்க மறுத்ததற்காக தனது உயிரையேத் தியாகம் செய்துள்ளான். அந்த 12 வயது Ángel Ariel Escalante Pérez, மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவின் குவாத்தமாலா நகரைச் சேர்ந்தவன். அண்மையில் (ஜூன்18,2015) ஏறக்குறைய ஆறுபேர் கொண்ட குற்றக் கும்பல் ஒன்று, இச்சிறுவனைத் தடுத்தி நிறுத்தி ஒரு பேருந்து ஓட்டுனரைக் கொலை செய்யுமாறு கட்டாயப்படுத்தியது. அந்தப் பாவச் செயலைச் செய்ய மறுத்த Ángel, அதில் பிடிவாதமாகவும் இருந்தான். அதனால் அந்தக் குற்றக் கும்பல், Ángelஐ, நானூறு அடிக்கு மேற்பட்ட ஓர் உயரமான பாலத்திலிருந்து இரக்கமற்று கீழே தள்ளிவிட்டது. கடந்த ஜூன் 18ம் தேதி, மதியம் ஒரு மணியளவில் குவாத்தமாலா நகரின் Belice பாலத்தின் அடியில், அதற்கருகில் வாழும் நல்ல நம்பிக்கையின் இயேசு(Jesús de la Buena Esperanza) குடியிருப்புப் பகுதி மக்கள் சிறுவன் Ángelஐ மிக ஆபத்தான நிலையில் பார்த்து குவாத்தமாலா நகர் தீயணைக்கும் படையினருக்குத் தகவல் அனுப்பினர். அவர்களும் உடனே அங்கு வந்து Ángelஐ மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இவ்வளவு உயரமான பாலத்திலிருந்து விழுந்தவர்கள் யாரும் இதுவரை உயிர் பிழைக்கவில்லை, இவன் இன்னும் உயிரோடு இருப்பதே புதுமை என்று தீயணைப்புப் படையின் பேச்சாளர் ஹாவியர் சோத்தோ அவர்கள் கூறினார். இரு கால்களிலும் முறிவு ஏற்பட்ட நிலையில் புனித இறையோவான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான் Ángel. 15 நாள் அவசர சிகிச்சைப் பலனளிக்காமல்  சிறுவன் Ángelன் உயிர் பிரிந்தது. 6ம் வகுப்பு படிக்கும் Angel, மருத்துவர்களிடம் கொடுத்த வாக்குமூலம் இதுதான்...

நான் பேருந்து ஓட்டுனரைக் கொலை செய்ய வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள். நான் மறுத்தேன். அதனால் அந்தப் பாலத்திலிருந்து என்னைக் கீழே தள்ளி விட்டார்கள்.(CNA ஜூலை 16,2015)

95 வயது பெரியவர் ஒருவர் தொடங்கியிருக்கும் ஒரு புதிய முயற்சி பற்றி CNA ஊடகத்தில் கடந்த வெள்ளியன்று வாசித்தோம். இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் 95 வயது யூதரான George Weidenfeld அவர்கள், Weidenfeld Safe Havens Fund என்ற ஒரு நிதியமைப்பை உருவாக்கியுள்ளார். இத்திட்டத்தின் மூலம், சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்குப் பலியாகும் கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பதற்குத் திட்டமிட்டுள்ளார். Weidenfeld அவர்கள் இத்திட்டத்தைத் தொடங்கியிருப்பதற்கு ஒரு காரணமும் உள்ளது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஹிட்லரின் நாத்சி வதை முகாம்களில், நச்சு வாயுவுக்கும், கடின வேலைகளுக்கும் இன்னும் பிற கொடுமைகளுக்கும் உட்பட்டு ஏறக்குறைய ஆறு இலட்சம் யூதர்கள் இறந்தனர் என்பது வரலாறு. Weidenfeld அவர்கள், 18 வயது இளைஞராக இருந்தபோது, 1938ம் ஆண்டில், அவர் வாழ்ந்த ஆஸ்ட்ரியாவை நாத்சிப் படைகள் ஆக்ரமித்து, யூதர்களைப் பிடித்துக்கொண்டு சென்றனர். ஆயினும், அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த Kindertransport என்ற இரயில் திட்டத்தின் மூலம், கிறிஸ்தவர்கள் எண்ணற்ற யூத இளையோரை நாத்சிகளிடமிருந்து காப்பாற்றி இங்கிலாந்தில் குடியமர்த்தினர். அதோடு அந்த இளையோர்க்கு மறுவாழ்வும் அளித்தனர் கிறிஸ்தவர்கள். இப்படிக் காப்பாற்றப்பட்ட இளையோரில் ஒருவர்தான் Weidenfeld. இவர் தனது பழைய நினைவுகளை அசைபோடுகிறார்..

இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் கிறிஸ்தவர்களின் தன்னலமற்ற மற்றும் மனத்தாராளம் நிறைந்த சேவைகளால் நான் இன்று 95 வயதை எட்டியுள்ளேன். அன்று கிறிஸ்தவர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் என்னைப்போன்ற யூத இளைஞர்களைக் காப்பாற்றியதால் இன்று நான் உயிர் வாழ்கிறேன். அன்று கிறிஸ்தவர்கள் எங்களை இங்கிலாந்துக்கு அழைத்து வந்து உண்ண உணவும், உடுக்க உடையும் கொடுத்து அந்நாட்டில் குடியமர அனைத்து உதவிகளையும் செய்தனர். ஆனால் இன்று உலகின் பல பாகங்களில் கிறிஸ்தவர்கள் சொல்ல முடியாத அளவுக்கு நசுக்கப்படுகின்றனர். நான் கிறிஸ்தவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். எனவே இந்தப் புதிய திட்டத்தின் வழியாக மத்திய கிழக்கில் அடக்கி ஒடுக்கித் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்கு உதவுவதற்குத் திட்டமிட்டுள்ளேன். அடுத்த இரு ஆண்டுகளில் 2000 கிறிஸ்தவர்களைக் காப்பாற்றுவதற்கான திட்டம் இது

மத்திய கிழக்கில் ஐ.எஸ். இஸ்லாமிய அமைப்பால், ஷியா முஸ்லிம்கள், யாதிகள், ட்ரூஸ்கள் போன்ற சிறுபான்மை இனத்தவரும் துன்புறுகின்றனர். அவர்களுக்கும் உதவ வேண்டுமே என்று, Weidenfeld அவர்களிடம் கேட்டபோது, இவர் தனது திட்டத்திற்கான காரணத்தை CNA ஊடகத்திடம் நியாயப்படுத்தியிருக்கிறார். Kindertransport இரயில் திட்டத்தின் மூலம் என்னைப்போன்று காப்பாற்றப்பட்ட எண்ணற்ற யூத இளையோர், கிறிஸ்தவர்களுக்குத் திருப்பிசெலுத்த வேண்டிய நன்றிக் கடன் உள்ளது. மேலும், 2ம் உலகப் போர் காலத்தில், Kindertransport இரயில் திட்டத்தின் மூலம் ஏறக்குறைய 700 சிறாரைக் காப்பாற்றிய மறைந்த நிக்கோலாஸ் வின்டன் என்பவரின் வீரச் செயலும் என்னில் ஆழமான நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியது. நிக்கோலாஸ் காப்பாற்றிய சிறாரில் அதிகமானோர் யூதச் சிறார் என்றும் இவர் சொல்கிறார். அன்பர்களே, முஸ்லிம் சகோதரர்கள், ஈகைத் திருநாளாம் இரமதானைச் சிறப்பித்து மகிழ்ந்துள்ளார்கள். ஆனால் இரமதான் புனித மாதம் துவங்கி முடிந்த ஒரு மாதத்திற்குள்கூட ஐந்தாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஓர் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இப்படி இறந்துள்ளவர்களில் 224 பேர் குழந்தைகள், 222 பேர் பெண்கள் மற்றும் 1,220 பேர் அப்பாவி பொதுமக்கள். இரமதான் கொண்டாட்ட நாளில் மட்டுமே 22 குழந்தைகள், 7 பெண்கள் உள்பட 69 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு வெளியிட்டுள்ள நெஞ்சை உறையவைக்கும் ஒரு காணொளிக் காட்சி இஞ்ஞாயிறன்று ஊடகங்களில் பிரசுரமாகியுள்ளது. ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், சிரியாவின் இராணுவ அதிகாரி ஒருவரின் தலையை வெட்டும் காணொளி காட்சி அது.

சிரியா நாட்டின் இராணுவ அதிகாரி ஒருவரை சிறைப்பிடித்துச் சென்ற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் அந்த அதிகாரியின் தலையை ஒரு சிறுவனைக் கொண்டு வெட்டியுள்ளனர். ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ள அந்தக் காணொளிக்  காட்சியில் அந்தச் சிறுவனின் முகம் உட்பட முழு உருவமும் தெளிவாகத் தெரிகிறது. வயது தெரியவில்லை. சிரியா இராணுவ அதிகாரியின் முதுகில் அச்சிறுவன் அமர்ந்து கழுத்தைப் பின்னோக்கி இழுத்து கத்தியால் அறுத்து, அதன்பின் தலையைத் துண்டாக வெட்டியுள்ளான். சிரியாவில் கடந்த ஒரு மாதத்தில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. ஒரு நாட்டின் இராணுவ அதிகாரியின் தலையை வெட்டும் அளவுக்கு ஒரு சிறுவனைப் பயன்படுத்தியுள்ளது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு. ஆனால் ஏறக்குறைய அதே வயதுடைய குவாத்தமாலா நாட்டுக் கத்தோலிக்கச் சிறுவன் Angel, அந்நாட்டுக் குற்றக்கும்பலின் கொலை ஆணைக்குப் பணிய மறுத்ததால் தனது உயிரையேத் தியாகம் செய்துள்ளான். அன்பு நேயர்களே, உக்ரேய்ன் கிரேக்க வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராக, 1900மாம் ஆண்டு முதல் 1944ம் ஆண்டுவரை பணிபுரிந்த பேராயர் Andrey Sheptytsky அவர்களின் வீரத்துவமான பண்புகளை கடந்த வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அங்கீகரித்துள்ளார். இதன்மூலம் பேராயர் Sheptytsky அவர்கள், முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தப்படுவார். இப்பேராயரும் 2ம் உலகப் போர்க் காலத்தில் 160க்கும் மேற்பட்ட யூதர்களுக்குப் புகலிடம் அளித்து அவர்களைக் காப்பாற்றியிருக்கிறார். அதோடு யூதர்களைக் காப்பாற்றுமாறு கிறிஸ்தவர்களையும் ஊக்கப்படுத்தியிருக்கிறார். இரஷ்யப் பேரரசு, பின்னர் போலந்து, பின்னர் நாத்சி ஜெர்மனி பின்னர் சோவியத் யூனியன் என, அந்நியர்களின் ஆட்சியில் உக்ரேய்ன் பல வகைகளில் துன்புற்றபோது தனது நாட்டிற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துள்ளார் பேராயர் Sheptytsky. இரஷ்யப் பேரரசு, இவரை 1914ம் ஆண்டு முதல் 1917ம் ஆண்டு வரை சிறையில் வைத்தது. எனினும் இவர் 1944ம் ஆண்டில் மரணம் அடையும்வரை தனது கொள்கையில் உறுதியாய் இருந்தார் என்று வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. 

ஒருநாள் இரண்டு சிட்டுக் குருவிகள் ஒரு மரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தன. அப்போது முதல் குருவி, யானையைப் போர்களங்களுக்கு அழைத்துப் போகிறார்கள், களியாட்டங்களில் பழக்கி, வீரவிளையாட்டு காட்டுகிறார்கள், ஊர்வலங்களில் கொண்டுவருகிறார்கள், யானை இல்லாத விழாக்களே இல்லை என்று சொன்னது. அதற்கு அடுத்த குருவி, யானைக்கு எப்படி இத்தனை ஆற்றல்கள் என்று கேட்டது. அதற்கு முதல் குருவி பதில் சொன்னது - வீறுடையான் நூறுடையான் என்று. அன்பு நேயர்களே, தங்கள் உயிரைப் பொருட்படுத்தாது பிறர் வாழ செயல்பட்ட மனிதர்கள் யானை போன்றவர்கள். இவர்கள், நெஞ்சில் உரம் கொண்டு, அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரல்களாக வாழ்ந்தவர்கள். இந்த மாமனிதர்களின் மனஉறுதியையும், பிறர்நலவாழ்வையும் பின்பற்றுவோம். நம் வாழ்வும் உயரிய இலக்குகளில் குன்றின் மேலிருக்கும் தீபங்களாக சுடர் விடட்டும், என்றும் பிறருக்கு நன்மையையே நினைப்பவர்களாக வாழ்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.