2015-07-20 16:24:00

திருத்தந்தை : இதயக் கண்கொண்டு மக்களைப் பார்த்தார் இயேசு


ஜூலை,20,2015. தனிமையாக இருக்க விரும்பிய நிலையிலும் மக்கள் மீது இரக்கம்கொண்டு, அவர்களுக்குப் போதித்த இயேசுவின் மனநிலை குறித்து, தன்  இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு திருப்பலி வாசகத்தின் அடிப்படையில் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, மக்களை உற்று நோக்குதல், அவர்கள் மீது கருணை கொள்ளல், அவர்களுக்கு கற்பித்தல் என்ற மூன்று வாக்கியங்களைக் கொண்டு தன் கருத்துக்களை, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களோடு பகிர்ந்து கொண்டார்.

மக்கள் கூட்டம் ஆயனில்லா ஆடுகள் போல் இருப்பதைக் கண்ட இயேசு, அவர்கள்மீது இரக்கம்கொண்டு அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்த நிகழ்வைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  ஒரு நல்ல ஆயனாக தன் இதயத்தின் கண்களைத் திறந்து இயேசு செயல்பட்டதை இது காண்பிக்கிறது என்றார்.

மக்கள் மீது கொண்ட இரக்கத்தால் தன் வார்த்தைகளைக் கொண்டு அவர்களுக்கு இயேசு உணவளித்தார் எனவும் கூறிய திருத்தந்தை, இதே உணர்வை தனக்கும் வழங்கும்படி, தன்  அண்மை திருத்தூதுப் பயணத்திற்கு முன், தான் இறைவனிடம் வேண்டியதாகவும் கூறினார். ஈக்குவதோர், பொலிவியா மற்றும் பரகுவாய் நாடுகளுக்கான தன் திருத்தூதுப் பயணத்தின்போது தனக்கு வரவேற்பளித்த அந்நாடுகளின் மக்களுக்கும், இப்பயணம் சிறப்பான முறையில் இடம்பெற உதவிய அனைத்து மக்களுக்கும் தான் நன்றியுரைப்பதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயற்கை வளங்களைப் பெருமளவில் கொண்டுள்ள இலத்தீன் அமெரிக்கக் கண்டம், மனித மற்றும் ஆன்மீக வளங்களைக் கொண்டு, கிறிஸ்தவ மதிப்பீடுகளில் ஆழமாக வேரூன்றியதாக உள்ளது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளால் துன்புற்றுவரும் இக்கண்டத்திற்கு அங்குள்ள தலத்திருஅவை தன்னால் இயன்ற அனைத்தையும் ஆற்றி வருகிறது என மேலும் தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.