2015-07-20 16:52:00

தலைவர்கள் பெற்றோர்போல் செயல்பட மியான்மார் கர்தினால் அழைப்பு


ஜூலை,20,2015.  பெற்றோர்கள் கடவுள்களாக போற்றப்படும் மியான்மார் கலாச்சாரத்தில், அரசியல் தலைவர்கள் அனைவரும் அனைத்து மக்களின் நலனையும் கவனத்தில்கொண்டு தேசப்பெற்றோராக செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்தார் அந்நாட்டு கர்தினால் Charles Maung Bo.

50 ஆண்டுகளான சர்வாதிகார ஆட்சியில் இல்லாத குடும்ப உணர்வை, குடியாட்சியின் தலைவர்கள் கொணரவேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக உரைத்த யாங்கூன் பேராயர் கர்தினால் Bo, பொருளாதார வீழ்ச்சியால் குடும்பங்கள் பிளவுபட்டுள்ளதாகவும், இளையோர் பல இடங்களில் சிதறிப் போயுள்ளதாகவும் கவலையை வெளியிட்டடார்.

அண்மைக் கணக்கெடுப்பின்படி மியான்மாரில் 40 விழுக்காட்டு மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார் கர்தினால்.

மியான்மார் எல்லையோரங்களில் மனிதர்கள் வணிகப்பொருட்களாக கடத்தப்படல், போதிய கல்வியறிவின்மை, போதைப்பொருட்களின் அச்சுறுத்தல், ஆயுத மோதல்கள் போன்றவை இன்றைய மியான்மார் மக்களுக்கு பெரும் முன்னேற்றத் தடைகளாக உள்ளன என அறிவித்த யாங்கூன் கர்தினால், பெற்றோர்களாகச் செயல்படவேண்டிய அரசியல் தலைவர்கள் இலாப நோக்குடைய முதலாளித்துவத்தின் பாதுகாவலர்களாக செயல்படுவது குறித்த கவலையையும் வெளியிட்டார்.

மியான்மாரில் தற்போது இரண்டு இலட்சம் மக்கள் நாட்டிற்குள்ளேயே குடிபெயர்ந்தவர்களாக வாழும் நிலையையும் சுட்டிக்காட்டி, அதற்கான நீதியான தீர்வுக்கும் அழைப்புவிடுத்தார் கர்தினால் போ. 

ஆதாரம் : Fides/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.