2015-07-20 16:52:00

தமிழகத்தில் சாலை விபத்துக்கள் அதிகரிப்பு


ஜூலை,20,2015.  இந்திய நகரங்களைப் பொறுத்தவரை, சென்னையிலேயே அதிகமான தற்கொலைகள் நிகழ்கின்றன என தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2014ம் ஆண்டு தமிழகத்தில் 16,122 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்றும், சென்னையில் மட்டும் 2,450 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் மராட்டிய மாநிலத்துக்கு அடுத்து தமிழகத்தில்தான் அதிகமாக தற்கொலைகள் இடம்பெற்றுள்ளன என்று அந்தக் காப்பகத்தின் 2014ம் ஆண்டுக்கான அறிக்கை கூறுகிறது.

தமிழகத்தில் கூடுதலான தற்கொலைகள் இடம்பெறுவதற்கு, மதுக்கடைகள் ஒரு முக்கியக் காரணமாக இருந்துள்ளன என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் அதிக விபத்துகள் நிகழும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக, அண்மை ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

விபத்துகள் தொடர்பாக, தேசிய ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப் பட்டியலில், இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் 2010 முதல் 2013 வரை 5,79,141 விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பட்டியலில். தமிழகத்தில் மட்டும் இந்த 4 ஆண்டுகளில் 88,963 விபத்துகள் நடந்துள்ளன. இந்த 4 ஆண்டுகளில நடந்த விபத்துகளில் இந்தியாவில் 6,17,629 பேரும், இதில், தமிழகத்தில் 1,06,888 பேரும் காயமடைந்துள்ளனர். இந்தியாவில் 1,95,770 பேரும் தமிழகத்தில் 23,766 பேரும் பலியாகி உள்ளனர்.

போதையில் வாகனம் ஓட்டியதில் இந்தியாவில் 20,290 விபத்துகளும், இதில்,  தமிழகத்தில் 2,764 விபத்துகளும் நடைபெற்றுள்ளன. போதை விபத்துகளில் தமிழகத்தில் 718 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துகளில் 60 விழுக்காடு, அதிக வேகம் காரணமாக நிகழ்வதாக அண்மை ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

ஆதாரம் : BBC/தி இந்து/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.