2015-07-20 15:28:00

கடுகு சிறுத்தாலும்–கேலி பிறருக்குத் தொந்தரவாக இருக்கக்கூடாது


ஓர் ஏரி ஓரமாக இரண்டு சிறார் நடந்து போய்க்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் ஏழை. மற்றவன் பணக்காரன். இவ்விருவரும் வழியில் ஒரு ஜோடி காலணிகளைப் பார்த்தனர். ஒரு விவசாயி, அவற்றை அங்கே விட்டுவிட்டு அருகிலிருந்த ஏரியில் கை கால் கழுவிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்த பணக்காரச் சிறுவன், இப்போது ஒரு வேடிக்கை செய்யலாம். அந்தக் காலணிகளைத் தூரத்தில் வீசி விடுவோம், அந்த ஆள் வந்து அவற்றைக் காணாமல் அல்லாடுவார், அங்கேயும் இங்கேயும் பதட்டத்தோடு ஓடுவார், நாம் அதைப் பார்த்து இரசிக்கலாம் என்று சொல்லி காலணிகளையும் தூக்கப் போனான். உடனே அந்த ஏழைச் சிறுவன், கொஞ்சம் பொறு, நீ சொல்வதில் வேடிக்கை இல்லை, உனது காலணிகள் தொலைந்தால் உடனே உன் அப்பா வாங்கித் தருவார், ஆனால் அந்த மனிதருக்கு அவை தொலைந்தால், அவர் வாயையும் வயிறையும் கட்டி பணத்தைச் சேர்க்க வேண்டியிருக்கும். அதனால் நான் ஒரு வேடிக்கை சொல்கிறேன், அது இன்னும் வேடிக்கையாக இருக்கும் என்றான். காலணிகள் இரண்டும் இருக்கிற இடத்திலே இருக்கட்டும். நீ உன் சட்டைப் பையிலிருந்து ஒரே ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து ஒரு காலணியின் குதிங்கால் பகுதியிலே வை. நாம் இருவரும் அந்த மரத்திற்குப் பின்னால் நின்று வேடிக்கை பார்ப்போம் என்றான். அதேபோல் நாணயத்தை வைத்துவிட்டு அச்சிறார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த விவசாயி காலிலிருந்த மண்ணைத் தட்டிவிட்டு காலணிகளை மாட்டப் போனார். நாணயம் இருந்தது தெரிந்தது. அதை எடுத்துக்கொண்டு, யாராவது பார்க்கிறார்களா என, சுற்றுமுற்றும் பார்த்தார் விவசாயி. பின்னர் வானத்தைப் பார்த்து, கடவுளே, இது உம் கருணைதான். யாரோ புண்ணியவான் மனதில் தருமம் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தை நீர் விதைத்திருக்கிறாய், அந்த மனிதர் நல்லா இருக்கனும் என்று வாழ்த்தி அந்த நாணயத்தை தனது கண்ணில் ஒத்திக்கொண்டார். அதைப் பார்த்த ஏழைச் சிறுவன், பணக்காரச் சிறுவனிடம், பார்த்தாயா, உனக்கு ஒரு ரூபாய் என்பது பெரிதல்ல, ஆனால் அந்த விவசாயி, உன்னைப் புண்ணியவான் என்று வாழ்த்திவிட்டுச் சென்றார். இதில் அவருக்கும் மகிழ்ச்சி, உனக்கும் மகிழ்ச்சி, உனக்குக் கிடைத்திருக்கும் மகிழ்ச்சி உயர்வானது என்றான். ஆம். வேடிக்கையும் கிண்டலும் அடுத்தவர்க்குத் தொந்தரவாக இருக்கக் கூடாது(கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் சொன்னதாக தென்கச்சியார்). 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.