2015-07-18 15:11:00

பேதுரு பசிலிக்காவில் முதன்முறையாக புனித பியோ திருப்பண்டம்


ஜூலை,18,2015. “ஈக்குவதோர், பொலிவியா, பரகுவாய் ஆகிய மூன்று இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு நான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்திற்காகச் செபித்ததற்கு நன்றி, தொடர்ந்து எனக்காகச் செபியுங்கள்”என்ற வார்த்தைகளை, இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருப்பத்தின்பேரில், புனித பாத்ரே பியோ அவர்களின் திருப்பண்டம் முதன்முறையாக வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்படும் இரக்கத்தின் ஜூபிலி ஆண்டு காலத்தில், 2016ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் புனித பாத்ரே பியோ அவர்களின் திருப்பண்டம் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என, பாத்ரே பியோ திருத்தல இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித பாத்ரே பியோ அவர்கள், ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுவதில் சிறந்தவராகப் போற்றப்படுகிறார். இவர், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் 2002ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி புனிதராக அறிவிக்கப்பட்டார்.

Pietrelcinaவின் புனித பியோ என்பவர், பொதுவாக பாத்ரே பியோ என்றே அழைக்கப்படுகிறார். 

2015ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி அமல அன்னை விழாவன்று ஆரம்பமாகும் இரக்கத்தின் ஜூபிலி ஆண்டு, 2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.