2015-07-18 14:56:00

கடுகு சிறுத்தாலும் – இறைவனுக்கென சில மணித்துளிகள்...


மின்காந்தத் திறனை உலகறியச் செய்த அறிவியல் மேதை Michael Faraday அவர்கள், ஒரு முறை அறிவியல் வல்லுனர்கள் கூட்டமொன்றில் ஒரு மணி நேரம் உரை நிகழ்த்தினார். அந்த ஒரு மணி நேரமும் அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் அம்மேதை சொன்ன கருத்துக்களில் ஆழ்ந்திருந்தனர். ஒரு மணி நேரம் சென்றதே தெரியவில்லை. அவரது உரை முடிந்ததும், அனைவரும் எழுந்து நின்று நீண்ட நேரம் கரவொலி எழுப்பினர். இங்கிலாந்து அரசரான ஏழாம் எட்வர்ட், அப்போது Walesன் இளவரசராக இருந்தார். அவரும் அக்கூட்டத்தில் பங்கேற்று, அறிவியல்  மேதை Faradayஐப் புகழ்ந்தார். கரவொலி மீண்டும் அரங்கத்தை நிறைத்தது. திடீரென, அரங்கத்தில் அமைதி நிலவியது. ஏனெனில், மேதை Faraday அவர்கள், அங்கிருந்து அவசரமாகக் கிளம்பிச் சென்றார். அரங்கத்திற்கு அருகில் இருந்த ஒரு கோவிலில் அப்போது நண்பகல் செபத்திற்காக மணி ஒலித்திருந்தது. இளவரசர், இன்னும் பிற அறிவியல் வல்லுனர்கள் தன்னைச் சுற்றியிருந்தாலும், Faraday அவர்கள், அந்த நேரத்தை இறைவனுக்கென ஒதுக்கியிருந்தால், கூட்டத்திலிருந்து, புகழ் மழையிலிருந்து விலகி, இறைவனை நாடிச்சென்றார்.

என்னதான் பணிகள் குவிந்தாலும், எவ்வளவுதான் பேரும் புகழும் நம்மைச் சூழ்ந்தாலும், இறைவனைத் தேடிச்செல்லும் நேரங்கள், ஒவ்வொரு நாள் வாழ்விலும் ஒதுக்கப்பட்டால், அதுவே, நாம் உயர்வடையும் உறுதியான வழி!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.