2015-07-17 17:05:00

வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு கூட்டத்தில் பேராயர் அவுசா


ஜூலை,17,2015. உலகில் வறுமை மற்றும் பசியை ஒழிப்பதற்கு உலக நாடுகள் வெளியிடும் அறிக்கைகள் செயல்வடிவம் பெற வேண்டும் மற்றும் அவற்றைச் செயல்படுத்துவதற்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டுமென்று ஐ.நா. கூட்டத்தில் வலியுறுத்தினார் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.

எத்தியோப்பியாவின் தலைநகர் Addis Ababaவில், ‘வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு’ குறித்து நடைபெற்ற 3வது அனைத்துலக கருத்தரங்கில் உரையாற்றிய ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள்,  நிலையான வளர்ச்சியை எட்டுவதற்கு மூன்று கூறுகளைப் பரிந்துரைத்தார். 

பல்வேறு துறைகளிலிருந்து வளர்ச்சிக்கென வழங்கப்படும் நிதியுதவிகள் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்கு உதவுவதாக அமைய வேண்டும், ஒவ்வொரு நாடும் தனது பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்குப் பொறுப்பு எனினும், பன்னாட்டு பொருளாதாரச் சூழலும் தனி நாடுகளுக்கு உதவும் வகையில் அமைதல் வேண்டும் என்றும் கூறினார் பேராயர் அவுசா.

உலகளாவியப் பொருளாதாரத்தில் பங்கு கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை இக்காலத்தில் அதிகரித்து வந்தாலும், மிகவும் வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு அனைத்துலக அளவில் ஆதரவு தேவைப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டினார் பேராயர் அவுசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.