2015-07-17 16:28:00

இறைவனோடு ஒன்றிணைந்து அழுகுரலைக் கேட்கிறோம்


ஜூலை,17,2015. இயற்கையோடு இணைந்த நம் வாழ்வு மற்றும் நம் உறவுகள் மீது  உண்மையான அக்கறை கொள்வது, உடன்பிறப்பு உணர்வு, நீதி மற்றும் பிறருக்கு விசுவாசமாக இருத்தலோடு பிரிக்க முடியாதது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“இறைவனோடு ஒன்றிணைந்து அழுகுரலைக் கேட்கிறோம்” என்ற தலைப்பில், உரோம் சலேசியானம் பல்கலைக்கழகத்தில், இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ள மூன்று நாள் அனைத்துலக கருத்தரங்கிற்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.

இலத்தீன் அமெரிக்க திருஅவைகளின் சுரங்கப் பணி கூட்டமைப்பின் ஒத்துழைப்போடு திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை ஏற்பாடு செய்துள்ள இக்கருத்தரங்கிற்கென, அந்த அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்களுக்கு அனுப்பியுள்ள  செய்தியில், சுரங்கத்துறையோடு தொடர்புடைய பிரிவுகளுடன் நேர்மையான மற்றும் மதிப்புமிக்க உரையாடலை எப்படி நடத்துவது என்பதை இதில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் சிந்திக்குமாறு கேட்டுள்ளார் திருத்தந்தை .

இழக்கப்பட்ட நிலத்திற்காக, நிலத்திலிருந்து சுரண்டப்பட்ட சொத்துக்காக, வன்முறையினால் ஏற்படும் வேதனைக்காக, மனித வர்த்தகம், அடிமைமுறை, பாலியல் வர்த்தகம் போன்றவற்றுக்காக, நீர் மாசடைந்ததற்காக... இப்படி பல காரணங்களுக்காக அழுகுரல்கள் கேட்கின்றன என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

சுரங்கத்துறையோடு தொடர்புடைய அனைத்துப் பிரிவினரும் தங்கள் துறைகளில் சந்தேகத்திற்கு இடமின்றி மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்றும், தற்போதைய நெருக்கடி உருவாக்கியுள்ள கூறுகளை எதிர்கொள்வதற்கு மனித மாண்பை அடிப்படையாகக் கொண்ட கலாச்சாரம் அவசியம் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார். 

இம்மாதம் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறும் இக்கருத்தரங்கில், ஆசியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா ஆகிய பகுதிகளில், சுரங்க வேலைகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.