2015-07-16 16:37:00

ஜூலை, 15, முதல் முறையாக, 'உலக இளையோர் திறமைகள் தினம்'


ஜூலை,16,2015. மனம் தளர்ந்து, வெறுப்படைந்துள்ள இளைய தலைமுறையை நாம் காண்கிறோம்; ஆனால், இளைய சமுதாயத்தின் முழுமையான நிலை இதுவல்ல என்று ஐ.நா.அவையின் பொதுச்செயலர், பான் கி மூன் அவர்கள் கூறினார்.

ஜூலை, 15, இப்புதனன்று, 'உலக இளையோர் திறமைகள் தினம்' ஐ.நா.அவையால் முதல் முறையாகக் கொண்டாடப்பட்டபோது, ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் வழங்கிய செய்தியில் இவ்வாறு கூறினார்.

தகுதியான திறமைகளை வளர்க்க நமது இளைய தலைமுறையினரை வழிநடத்தினால், நாம் எதிர்பார்க்கும் முன்னேற்றத்தை எளிதாகவும், உறுதியாகவும் அடைய முடியும் என்று பான் கி மூன் அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டார்.

"முன்னேற்றத்திற்காக முதலீடு செய்தல்" என்ற தலைப்பில், எத்தியோப்பியாவின் தலைநகர் Addis Ababaவில் நடைபெறும் ஓர் அகில உலக கருத்தரங்கில் பேசிய, ஐ.நா. அவையின் இளையப் பிரதிநிதி, Ahmad Alhendawi அவர்கள், நாம் செய்யக்கூடிய முக்கியமான முதலீடு, இளைய தலைமுறையை ஆக்கப்பூர்வமானத் திறமைகளில் வளர்ப்பதே என்று வலியுறுத்தினார்.

அடுத்த 15 ஆண்டுகளுக்கு உலகெங்கும் இளைய தலைமுறையினரின் வேலையற்ற நிலையைப் போக்க, 60 கோடி வேலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று, ஐ.நா.வின் தொழில் நிறுவனமான ILOவின் அண்மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.