2015-07-15 18:17:00

காலநிலை நெருக்கடியும், நவீன அடிமைத்தனமும் – வத்திக்கான்


ஜூலை,15,2015. காலநிலை நெருக்கடியும், நவீன அடிமைத்தனமும் இன்றைய சமுதாயம் சந்திக்கும் இரு முக்கியமான, அவசரக்கால பிரச்சனைகள் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜூலை 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் உலகின் பல முக்கிய நகரங்களிலிருந்து வத்திக்கானுக்கு வருகைதரும் பெருநகர மேயர்கள் பங்கேற்கும் கருத்தரங்கைக் குறித்து, இப்புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய பாப்பிறை அறிவியல், சமூகவியல் கழகத்தின் தலைவர், ஆயர் Marcelo Sanchez Sorondo அவர்கள் இவ்வாறு கூறினார்.

"நவீன அடிமைத்தனமும், காலநிலை நெருக்கடியும்: பெருநகரங்களின் அர்ப்பணம்" என்ற தலைப்பில் பாப்பிறை அறிவியல், சமூகவியல் கழகம் ஏற்பாடு செய்துள்ள இக்கருத்தரங்கில், பெருநகர மேயர்கள் கலந்துகொள்வது இதுவே முதல்முறை என்பதை, ஆயர் Sorondo அவர்கள் சுட்டிக்காட்டினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள "இறைவா, உமக்கே புகழ்" திருமடலில், மனிதர்களின் வாழ்வு முறை மாற்றம், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் என்று கூறியுள்ளதை, இக்கருத்தரங்கு ஆழமாக விவாதிக்கும் என்று ஆயர் Sorondo அவர்கள் எடுத்துரைத்தார்.

சுற்றுச்சூழல் மாற்றங்களின் ஆபத்தான விளைவுகளை அதிகம் எதிர்கொள்வது வறியோரே என்பதும், ஒருங்கிணைந்த வகையில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு, மனித குலத்தின் பல்வேறு பிரச்சனைகளை, குறிப்பாக, நவீன அடிமைத்தனம் குறித்தப் பிரச்சனைகளைச் சிந்திப்பது அவசியம் என்று, கருத்தரங்கின் அமைப்பாளர்களில் ஒருவரான, ஆயர் Sorondo அவர்கள் வலியுறுத்தினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.