2015-07-14 15:05:00

விவிலியத் தேடல் : தாலந்து உவமை – பகுதி - 1


மத்தேயு நற்செய்தியில் மட்டும், இயேசு சொல்லித்தந்த பாடங்கள் ஐந்து உரைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதல் உரை, இந்த நற்செய்தியின் 5,6, மற்றும் 7ம் பிரிவுகளில் நாம் காணும் மலைப் பொழிவு என்ற புகழ்பெற்ற உரை. இறுதி உரை, நிறைவுகாலப் பொழிவு என்று 24, மற்றும் 25ம் பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ளது. நிறைவுகாலப் பொழிவின் முக்கிய கருத்தாக இயேசு தன் சீடர்களுக்கு வழங்கும் அறிவுரை... 'விழிப்பாயிருங்கள்' என்ற அறிவுரை.

நாம் எதிர்பாராத நேரத்தில் மானிடமகன் வருவார், எனவே விழிப்பாயிருக்கவேண்டும் என்ற எச்சரிக்கையை தன் சீடர்களுக்கு விடுக்கும் இயேசு, மானிடமகனின் வருகைக்காக, தகுந்த ஏற்பாடுகளுடன் காத்திருக்கவேண்டும் என்ற உண்மையை வலியுறுத்த மணமகளின் தோழியர் உவமையைக் கூறினார். இந்த உவமையில் கடந்த சில வாரங்களாக நாம் தேடல் பயணம் மேற்கொண்டோம்.

காத்திருப்பது மட்டும் போதாது, மானிடமகன் வந்ததும், அவரிடம் தங்கள் வாழ்வைக் குறித்த கணக்கு கொடுக்கவும் தயாராக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்த, இயேசு, தாலந்து உவமையைக் கூறினார். இவ்விரு உவமைகளையும், ஒன்றன்பின் ஒன்றாக இயேசு தொடர்ந்து கூறியதாக நற்செய்தியாளர் மத்தேயு பதிவு செய்துள்ளார். மத்தேயு நற்செய்தியில் கூறப்பட்டுள்ள 23 உவமைகளில், 13ம் பிரிவில் கூறப்பட்டுள்ள விதை விதைப்பவர் உவமையும் (மத். 13: 3-9), 25ம் பிரிவில் கூறப்பட்டுள்ள 'தாலந்து உவமை'யும் (மத். 25: 14-30) புகழ்பெற்றவை என கருதப்படுகின்றன.

17 இறைச் சொற்றொடர்களைக் கொண்டுள்ள 'தாலந்து உவமை'யை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். பயணம் மேற்கொண்ட ஒரு தலைவர், தன் மூன்று பணியாளர்களை அழைத்து, அவர்களிடம் தன் உடைமைகளை ஒப்படைத்ததையும், பொறுப்பைப் பெற்றவர்கள், தங்களுக்குக் கொடுக்கப்பட்டதைக் கொண்டு என்ன செய்தனர் என்பதையும் முதல் பகுதியாகக் கருதலாம். (மத். 25: 14-18)

தலைவர் திரும்பி வந்ததும், கணக்குக் கேட்டார் என்பதையும், முதலிரு பணியாளர்கள் தாங்கள் ஆற்றிய பணியின் கணக்கை ஒப்படைத்து, அதற்குரிய வெகுமதியைப் பெற்றனர் என்பதையும் இரண்டாம் பகுதியாகக் கருதலாம். (மத். 25: 19-23)

இந்த உவமையின் நாயகனான மூன்றாவது பணியாள், தனக்கு வழங்கப்பட்டதைக் கொண்டு எதுவும் செய்யாமல், அதை அப்படியே தலைவரிடம் திரும்பத் தந்தார் என்பதும், அதற்குரிய தண்டனையைப் பெற்றார் என்பதும் மூன்றாம் பகுதியாகக் கூறப்பட்டுள்ளது. (மத். 25: 24-30)

இந்த உவமையின் முதல் பகுதிக்கு இப்போது செவிமடுப்போம்:

மத்தேயு நற்செய்தி 25: 14-18

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.”

உவமையின் முதல் வரிகளே நம் கவனத்தை ஈர்க்கின்றன. நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார் என்ற வார்த்தைகளுடன் இயேசு இந்த உவமையைத் துவக்குகிறார். தன் பணியாளர்களிடம் குறிப்பிட்டப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நெடும் பயணம் செல்லும் தலைவரை, லூக்கா நற்செய்தியின் 'மினா நாணய உவமை'யிலும் நாம் சந்திக்கிறோம். லூக்கா நற்செய்தி 19ம் பிரிவில் கூறப்பட்டுள்ள 'மினா நாணய உவமை'யில், பயணம் செய்யும் தலைவர்,

..... தம் பணியாளர்கள் பத்துப் பேரை அழைத்து, பத்து மினாக்களை அவர்களிடம் கொடுத்து அவர்களை நோக்கி, 'நான் வரும்வரை இவற்றை வைத்து வாணிகம் செய்யுங்கள்' என்று சொன்னார்.  (லூக்கா 19:13) என்று வாசிக்கிறோம். இவ்வுவமையில் நாம் சந்திக்கும் தலைவர், தன் செல்வங்களை பணியாளர்களுக்குத் தந்தபோது, ஒரு நிபந்தனையோடு, கட்டளையோடு தருவதைக் காண்கிறோம்.

'தாலந்து உவமை'யில் கூறப்பட்டுள்ள தலைவரோ, எவ்விதக் கட்டளையோ, ஆலோசனையோ கூறாமல், தன் உடைமைகளைப் பகிர்ந்தளிக்கிறார். நிபந்தனை ஏதுமின்றி, வழங்கும் இத்தலைவர், இறைவனை நம் கண்முன் கொணர்கிறார். இவ்வுலகம் என்ற கருவூலத்தை எவ்வித நிபந்தனையும் இன்றி இறைவன் நம் பொறுப்பில் ஒப்படைத்துள்ளார் என்ற உண்மையை, 'தாலந்து உவமை'யின் முதல் வரிகள் நமக்கு நினைவுறுத்துகின்றன.

அடுத்து நம் கவனத்தை ஈர்க்கும் சொல்... 'தாலந்து'. 'தாலந்து' என்ற சொல்லுக்கு விவிலிய விரிவுரையாளர்கள் தரும் விளக்கங்களை வைத்து கணக்கிட்டால், இல்லத்தலைவர் தன் பணியாளர்களிடம் விட்டுச் சென்ற தொகை பெருமளவு என்பது புரிகிறது. வெள்ளியால் ஆன 'தாலந்து' என்றால், 6000 நாட்களுக்கு, அதாவது, ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குரிய கூலித் தொகை. தங்கத்தால் ஆன 'தாலந்து' என்றால், 1,80,000 நாட்களுக்கு, அதாவது, 600 ஆண்டுகளுக்குரிய கூலித் தொகை.

இந்தப் புள்ளிவிவரத்தைக் கொண்டு பார்க்கும்போது, ஒரு தாலந்தைப் பெற்றவர், 20 அல்லது, 600 ஆண்டுகளுக்குரிய கூலித் தொகையையும், 2 தாலந்துகளைப் பெற்றவர், 40 அல்லது, 1200 ஆண்டுகளுக்குரிய கூலித் தொகையையும், 5 தாலந்து பெற்றவர், 100 அல்லது, 3000 ஆண்டுகளுக்குரிய கூலித் தொகையையும் பெற்றுக் கொண்டனர் என்று புரிந்து கொள்கிறோம்.

வியப்பில் ஆழ்த்தும் இந்த எண்களை சிந்தித்தபோது, 'அற்புதமான வங்கிக் கணக்கு' என்ற தலைப்பில் எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல் நினைவுக்கு வந்தது. அந்த வங்கிக் கணக்கைப் பற்றிய விவரங்கள் இதோ:

ஒவ்வொரு நாள் காலையிலும் உங்களுக்கு ஓர் அற்புதப் பரிசு வழங்கப்படுகிறது. அதாவது, உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 நாணயங்கள் இலவசமாகத் தரப்படுகின்றன. ஆனால், இந்தப் பரிசுக்கே உரிய சில விதிமுறைகள் உள்ளன. அவை:

1. ஒவ்வொரு நாளும் நீங்கள் விழிக்கும்போது, 86,400 நாணயங்களுடன் உங்கள் வங்கிக் கணக்கு துவங்குகிறது.

2. அந்தந்த நாளில் நீங்கள் பயன்படுத்தாத, அல்லது செலவழிக்காத நாணயங்கள் திரும்ப எடுத்துக்கொள்ளப்படும்.

3. உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நாணயங்களை வேறு ஒருவரது வங்கிக் கணக்கிற்கு மாற்ற முடியாது.

4. இந்த நாணயங்களை நீங்கள் மட்டுமே செலவழிக்க முடியும்.

5. இந்த வங்கிக் கணக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடப்படலாம்.

இத்தகைய விதிமுறைகளுடன் உங்களை வந்தடையும் நாணயங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வீர்கள்?

உங்களுக்குத் தேவையான, பிடித்தமான விடயங்களுக்காக நாணயத்தை செலவழிப்பீர்கள். உங்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கு நெருங்கியவர்களுக்காகவும் நாணயத்தை செலவழிப்பீர்கள். சிலவேளைகளில் உங்களுக்கு முன்பின் அறிமுகமில்லாதவர்களுக்காகவும் இந்த நாணயங்களைச் செலவழிக்க நீங்கள் தயங்க மாட்டீர்கள்.

ஏனெனில், ஒவ்வொரு நாளும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 நாணயங்கள் வந்து சேருகின்றன என்ற உறுதி உங்களுக்கு இருப்பதால், இதனை தாராள மனதோடு செலவு செய்யத் தயங்க மாட்டீர்கள்... செலவாகாத நாணயங்கள் உங்களுக்கு மீண்டும் கிடைக்காது என்ற எண்ணம், உங்கள் உள்ளத்தை இன்னும் தாராளமாக செலவு செய்யத் தூண்டும்.

இது வெறும் கற்பனை கணக்கு அல்ல. இத்தகைய பரிசு ஒவ்வொரு நாளும் நம்மை வந்தடைகிறது. நாம்தான் இந்தப் பரிசை தகுந்த வகையில் பார்க்கத் தவறுகிறோம்.

ஆம்... ஒவ்வொரு நாளும் நமக்குக் கிடைக்கும் 24 மணி நேரங்கள்... 1440 நிமிடங்கள், 86,400 நொடிகள் நம் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு நாளும் வழங்கப்படும் நாணயங்கள்.

ஒவ்வொரு நாள் காலையிலும் நாம் விழிக்கும்போது நம்மை வந்தடையும் 86,400 நொடிகள், நமக்கு வழங்கப்படும் கொடை. நாம் உறங்கச் செல்லும்போது, அதுவரை நாம் பயன்படுத்தாத நொடிகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

கண்விழித்திருக்கும் வேளையில் நம்மிடம் உள்ள நொடிகளை நமக்கும், பிறருக்கும் பயனுள்ள வகையில் பயன்படுத்தலாமே. நேற்று நாம் இழந்துவிட்ட நொடிகளைப் பற்றிக் கவலைப்படுவதால், அவை மீளவும் வந்துவிடாது.

தரப்பட்டுள்ள நொடிகளை, நமக்காகவும், நமக்கு நெருங்கியவர்களுக்காகவும் தகுந்த வகையில் பயன்படுத்துவதே, இறைவன் வழங்கிய இந்தக் கொடைக்கு, நாம் காட்டக்கூடிய நன்றிக் கடன்.

86,400 நொடிகளை மட்டுமல்ல, அவற்றுடன் உலகின் பல்வேறு கொடைகளை, எவ்வித நிபந்தனையுமின்றி, ஒவ்வொரு நாளும் நமக்கு இறைவன் வழங்கிவருகிறார். இந்தக் கொடைகளை பயனுள்ள வகையில் பயன்படுத்துகிறோமா, அல்லது நமக்கும், பிறருக்கும் பயன்படாத வகையில் புதைத்து விடுகிறோமா என்ற ஆன்ம ஆய்வை அவ்வப்போது மேற்கொண்டால், குறிப்பாக, இரவு உறங்கச் செல்வதற்கு முன், இந்த ஆய்வை மேற்கொண்டால் பயன் பெறலாம்.

தங்களுக்கு வழங்கப்பட்ட 'தாலந்து'களுக்கு உரிய கணக்கை, பணியாளர்கள் எவ்விதம் வழங்கினர் என்பதை அடுத்தத் தேடலில் தொடர்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.