2015-07-14 15:54:00

எபோலா நோய் தடுப்பு முயற்சிகளுக்கு திருப்பீடம் பாராட்டு


ஜூலை,14,2015. எபோலா நோய் எதிர்காலத்தில் மீண்டும் பரவாமல் தடுப்பதற்கு, உறுதியான நலவாழ்வு அமைப்பு முறைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று, எபோலா நோய் குறித்த ஐ.நா. கூட்டத்தில் கூறினார் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.

கடந்த வார இறுதியில் நியுயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பாராவையாளர் பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள், எபோலா நோய்ப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த கத்தோலிக்க சமூகங்கள், இந்நோய் தடுப்பு நடவடிக்கைகளில் முன்னணியில் நின்றன என்றும் கூறினார்.

லைபீரியாவில் எபோலா நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று அறிவிக்கப்பட்ட 45 நாள்களில் அந்நாட்டில் இந்நோயால் இறப்புகள் இடம்பெற்றதையும் குறிப்பிட்ட பேராயர் அவுசா அவர்கள், வருங்காலத்தில் எபோலா நோய் மீண்டும் பரவாமல் தடுப்பதற்கு, நலவாழ்வு அமைப்பு முறைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

எபோலா நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு கத்தோலிக்கத் திருஅவை இலட்சக்கணக்கான டாலர் மதிப்புள்ள உதவிகளையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஐந்து இலட்சம் யூரோக்களையும் வழங்கியுள்ளதை ஐ.நா. கூட்டத்தில் குறிப்பிட்டார் பேராயர் அவுசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.