2015-07-14 15:58:00

ஈராக்கில் கிறிஸ்தவர்கள் கடத்திக் கொலை


ஜூலை,14,2015. ஈராக்கில் வன்முறைக் குழுக்களும், தனியாட்களும் அப்பாவி மக்களைக் கொலை செய்வதும், அவர்களிடமிருந்து பணம் பறிப்பதுமான சூழல் நிலவும் இவ்வேளையில், அப்பாவி பொது மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஈராக்கில் கிறிஸ்தவ சமூகமும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாகவும், கடந்த இரு வாரங்களில் கடத்தப்பட்ட நான்கு கிறிஸ்தவர்களில் இருவர், பிணையல்தொகையை செலுத்துவதற்கு உறுதி கூறியும் அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ அவர்கள் கூறினார்.

Qais Abd Shaya, Saher Hann Sony ஆகிய இரு கிறிஸ்தவர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், ஈராக் அரசு, மக்களையும், அவர்களின் சொத்துக்களையும் பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈராக்கில் பாதுகாப்புச் சூழல்கள் மேலும் மேலும் மோசமடைந்து வருகின்றன என்று கவலை தெரிவித்துள்ள முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், கிறிஸ்தவர்கள், ஈராக்கின் முழு உரிமை பெற்ற குடிமக்கள், இவர்கள், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, நாட்டின் பண்பாட்டுக்கும், கலாச்சாரத்திற்கும் உதவி வருகின்றனர் என்றும் அரசுக்கு நினைவுபடுத்தியுள்ளார்.   

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.