2015-07-14 15:50:00

இரானின் அணுத் திட்டம் குறித்த புதிய உடன்பாட்டுக்கு வரவேற்பு


ஜூலை,14,2015. இரானின் அணுத் திட்டம் குறித்து, இரானுக்கும், ஆறு வல்லரசு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள புதிய உடன்பாட்டை திருப்பீடம் ஆர்வமுடன் வரவேற்பதாக திருப்பீட செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் இச்செவ்வாயன்று கூறினார்.

இரான் அணுத் திட்டம் குறித்து இதுவரை நடந்துள்ள பேச்சுவார்த்தைகளில் தற்போது வியன்னாவில் நடந்துள்ளது முக்கியமானது என்றுரைத்த அருள்பணி லொம்பார்தி அவர்கள், இந்த உடன்பாடு பலன்தருவதற்கு அனைத்து தரப்பினரின் தொடர் முயற்சிகளும் அர்ப்பணமும் தேவைப்படுகின்றது என்றும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

நாம் எதிர்பார்க்கும் பலன்கள், அணுத்திட்டத்தோடு நின்றுவிடாமல், மேலும் பல விவகாரங்களில் இடம்பெற வேண்டும் என்ற திருப்பீடத்தின் எதிர்பார்ப்பையும் வெளியிட்டார் அருள்பணி லொம்பார்தி.

பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற இரான் அணுத் திட்ட விவகாரத்தில் இச்செவ்வாயன்று ஓர் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடு, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. நிறுவனம் ஆகியவற்றால் இரான் மீது திணிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை நீக்குவதற்கு உதவியாக, இரான் தனது அணுத் திட்டத்தைக் கட்டுப்படுத்த இசைவு தெரிவித்துள்ளது.

இரான் அணு குண்டைத் தயாரிக்கும் நோக்கத்தைக் கொண்டிருப்பதாக மேற்குலகம் சந்தேகித்தது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.