2015-07-13 16:34:00

பரகுவாய் சேரியில் திருத்தந்தை-விசுவாசம் நம்மை ஒன்றிணைக்கிறது


ஜூலை,13,2015. உங்களோடு நேரம் செலவழிக்காமல் பரகுவாய் நாட்டைவிட்டுச் செல்ல முடியாது. திருக்குடும்பப் பெயரைக் கொண்டுள்ள இந்தப் பங்குத் தளத்திற்கு நான் வந்தவுடனே, எல்லாமே எனக்குத் திருக்குடும்பத்தை நினைவுபடுத்தின. உங்களின், உங்கள் சிறாரின், உங்கள் வயதானவர்களின் முகங்களைப் பார்க்கும்போதும், இந்த இடத்தில் மாண்புள்ள வாழ்வை வாழ்வதற்கு நீங்கள் எதிர்கொள்ளும் இடர்களை உங்கள்  அனுபவங்களிலிருந்து கேட்டபோதும், கடந்த சில வாரங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மோசமான காலநிலையால் நீங்கள் எதிர்கொண்ட இடர்களை அறிந்தபோதும் பெத்லகேமின் சிறிய திருக்குடும்பத்தையே நினைக்க வைத்தன. ஆனால், உங்களின் இத்துன்பங்கள், உங்களின் சிரிப்பையும், மகிழ்வையும், நம்பிக்கையையும் எடுத்துவிடவில்லை. உங்களின் ஒருமைப்பாட்டுணர்வையும் குறைத்துவிடவில்லை, மாறாக அது வளரவே உதவியுள்ளன. இயேசு பிறந்திருந்த நேரத்தில், பெத்லகேமில் திருக்குடும்பம் வீடின்றி குடும்பமின்றி அந்நிய நாட்டில் இருந்தனர். அச்சமயத்தில்  இடையர்களும் மக்களும் அக்குடும்பத்தைக் காண வந்தனர். இயேசுவின் தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் அவர்கள் நொடிப்பொழுதில் அடுத்திருப்பவர்களாக மாறினர். இயேசு நம் வாழ்வில் வரும்போதும் இதுதான் நடக்கிறது. இதுதான் விசுவாசத்தால் நடக்கிறது. விசுவாசம் நம்மை நெருங்கிவரச் செய்கிறது. அது நம்மை அடுத்திருப்பவர்களாக ஆக்குகிறது. அது நம்மைப் பிறரின் வாழ்வோடு நெருக்கமடையச் செய்கிறது. விசுவாசம், நம் அர்ப்பணத்தையும், நம் தோழமையையும் விழித்தெழச் செய்கிறது. இயேசுவின் பிறப்பு நம் வாழ்வை மாற்றுகிறது. அந்த இடையர்கள் போன்று, உங்களின் அடுத்திருப்பவர்களாக இருந்து, நம் விசுவாசத்தை உங்களோடு சேர்ந்து கொண்டாடுவதற்கு நானும் இங்கு வந்துள்ளேன். நீங்கள், உங்கள் இடங்களில் மறைப்பணியாளர்களாகச் செயல்பட்டு, இளம் குடும்பங்களுக்கும், துன்புறும் குடும்பங்களுக்கும் வயதானவர்களுக்கும் உதவிசெய்யுங்கள். உங்கள் குடும்பங்களைத் திருக்குடும்பத்திடம் அர்ப்பணிக்கிறேன். எனக்காகச் செபிக்க மறக்காதீர்கள்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.