2015-07-13 16:23:00

திருஅவை தனது மறைப்பணியில் அனைவரையும் வரவேற்கிறது


ஜூலை,13,2015. இயேசு பன்னிருவரையும் தம்மிடம் அழைத்து, அவர்களை இருவர் இருவராக நற்செய்தி அறிவிக்க அனுப்பிய நற்செய்திப் பகுதியை நாம் வாசிக்கக் கேட்டோம். இதில், உணவு, பணம், பயணப் பை, கைத்தடி, காலணிகள், மேலாடை ஆகிய சொற்களில் நாம் கவனம் செலுத்தலாம். ஆனால் ஒரு முக்கிய சொல் வெகு எளிதாக கவனிக்கப்படாமல் விடப்படலாம். கிறிஸ்தவ ஆன்மீகத்தின் இதயமாக உள்ள அச்சொல் வரவேற்பு என்பதாகும். நல்ல போதகராகிய இயேசு, வரவேற்பையும், விருந்தோம்பலையும் அனுபவிக்கும் பொருட்டு தம் பன்னிரு சீடர்களை அனுப்புகிறார். சமுதாயத்தில் செல்வாக்குள்ள மனிதர்களாக, நிலப்பண்ணையாளர்களாக, சட்டங்களையும் விதிமுறைகளையும் கொண்ட இராணுவ அதிகாரிகளாக இயேசு அவர்களை அனுப்பவில்லை. ஆனால், கிறிஸ்தவப் பயணம் இதயங்களை மாற்றும் சக்தி கொண்டது என்பதை உணரக்கூடிய மனிதர்களாக இயேசு அவர்களை அனுப்புகிறார். நம் மறைப்பணிகளை, திட்டங்கள் என்ற கண்ணோட்டத்தில் எத்தனை முறை பார்க்கிறோம்? நம் சொந்த விவாதங்களின் அடிப்படையில், மக்களை மனமாற்ற முடியும் என்பதுபோல், பல யுக்திகளையும், வழிமுறைகளையும் கையாள்வதை நற்செய்தி அறிவிப்புப் பணி என்று, எத்தனை முறை நாம் கருதியிருக்கிறோம்?  மறைப்பணி, நற்செய்தி அறிவிப்பு, விசுவாசத்தைப் பகிர்தல் ஆகியவை திட்ட நிகழ்வுகள் அல்ல, ஆனால், அவை, இறைவனின் அருள்பொழிவுக்குப் பதில்சொல்லும் நம் வாழ்வு முறையிலிருந்து பிறப்பதாகும். வரவேற்பு, விருந்தோம்பல் என்ற மொழியை நாம் பேசுவதற்கு முயற்சித்தால் எவ்வளவோ நன்மைகளை நாம் ஆற்ற முடியும்.  இறைவனோடு நாம் கொண்டிருக்கும் ஒன்றிப்பு எப்போதும் மிகுந்த கனிகளை வழங்கும், எப்போதும் வாழ்வையும் அளிக்கும். இறைவனில் ஆழமான விசுவாசம் கொண்டிருப்பது குடும்பங்களில் கற்றுக்கொள்ளப்படுகிறது. இறைவனருளின் வல்லமையை அனுபவித்துள்ள சமுதாயத்திலும் இது கற்றுக்கொள்ளப்படுகிறது. இந்தச் சமுதாயம், இறைவனருளைப் பிறரோடு பகிர வேண்டுமென்பதையும் அறிந்திருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நம்மை ஏற்றுக்கொள்ளுமாறும், நம்மை வரவேற்குமாறும் நாம் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. இப்படிச் செய்வதே நம் வறுமையின், சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும். அதேநேரம். நாம் யாரையும் வரவேற்கக் கூடாது, மக்கள் மத்தியில் வரவேற்புப் பண்புடன் நாம் வாழக் கூடாது என்று யாராரலும் நம்மைக் கட்டாயப்படுத்த முடியாது. நம் சகோதர, சகோதரிகளை, குறிப்பாக, வாழ்வுமீது நம்பிக்கையையும், ஆர்வத்தையும் இழந்துள்ள மக்களை நாம் ஏற்று அவர்களை அரவணைக்கக் கூடாது என்று யாராரலும் நம்மைக் கட்டாயப்படுத்த முடியாது. திருஅவை, திறந்த இதயமுள்ள ஒரு தாய். அன்னை மரியை போன்ற இத்தாய், எல்லாரையும், குறிப்பாக, தேவையில் இருப்போரை எப்படி வரவேற்பது என்பதை அறிந்து ஏற்கிறது.  நீங்கள் உங்களுக்கிடையே சண்டையிட்டுக் கொள்வதற்கு சாத்தான் விருபுகிறான். ஏனெனில், சாத்தான், உங்களைப் பிரிக்கிறான், தோற்கடிக்கிறான், உங்கள் விசுவாசத்தைப் பறித்துக் கொள்கிறான். எனவே நீங்கள் விசுவாசத்தைப் பாதுகாப்பதில் ஒருமைப்பாட்டுணர்வைக் காட்டுங்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.