2015-07-13 15:46:00

கடுகு சிறுத்தாலும் : உலகம் முகம் பார்க்கும் கண்ணாடி போன்றது


அந்த அலுவலகத்தில் பணியாற்றும் அனைவரும் ஒருநாள் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். அறிவிப்புப் பலகையில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்கச் சென்றனர். “உங்கள் வளர்ச்சிக்கும் நம் நிறுவன வளச்சிக்கும் இடையூறாக இருந்த நபர் நேற்று காலமானார், அடுத்த கட்டடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் சென்று இறுதி வணக்கம் செலுத்தவும்”என்று அதில் எழுதப்பட்டிருந்தது. இதைப் படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கும் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது. பிறகு நம் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அறிவதற்கு ஆர்வமும் ஏற்பட்டது. அனைவரும் அடுத்த கட்டடத்திற்குச் சென்றனர். சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராகச் செல்ல ஆரம்பித்தனர். சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தவன் யாராக இருக்கும், நல்லவேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கிச் சென்றனர். சவப்பெட்டியினுள் எட்டிப் பார்த்தவர்களுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது. சவப்பெட்டிக்குள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது. அந்தக் கண்ணாடி அருகில் ஒரு வாசகமும் எழுதி இருந்தது. “உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம், நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது, உங்கள் வளர்ச்சியை உங்களைத் தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்று எழுதப்பட்டிருந்தது. ஆம். ஒருவரின் வாழ்வை அவரின் முதலாளியாலோ, அவரின் நண்பர்களாலோ மாற்ற முடியாது, ஆனால் அந்த நபர் நினைத்தால் மட்டுமே தனது வாழ்வை மாற்ற முடியும். உலகம் முகம் பார்க்கும் கண்ணாடி போன்றது. அது ஒவ்வொருவருக்கும் அவரவர் எண்ணங்களையே திருப்பிக் கொடுக்கும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.