2015-07-13 16:06:00

Banado Norte சேரிப் பகுதிக்குச் சென்றார் திருத்தந்தை


ஜூலை,13,2015. பரகுவாய் நாட்டிற்கான மூன்று நாள் திருத்தூதுப் பயணத்தின் நிறைவு நாளான இஞ்ஞாயிறு காலை முதல் நிகழ்ச்சியாக, பரகுவாய் தலைநகர் அசுன்சியோன் நகரின் Banado Norte சேரிப் பகுதிக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். பரகுவாய் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இச்சேரியில் வாழும் ஏறக்குறைய 15 ஆயிரம் குடும்பங்கள் அவ்வாற்றில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்படுகின்றன. பல சமயங்களில் சகதியும் தண்ணீரும் நிறைந்து மக்கள் நடமாடுவதற்கே இயலாத இடமாக இது இருக்கும். அப்பகுதியில் மொத்தம் 13 ஆலயங்கள் உள்ளன. இவற்றில் இயேசு சபையினர் நடத்தும் திருமுழுக்கு யோவான் ஆலயமே மிகப் பெரியது. இச்சேரியின் திருக்குடும்பப் பங்கில் ஏறக்குறைய ஒரு இலட்சம் மக்களைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்நிகழ்வில் முதலில் அச்சேரியிலிருந்து இருவர், வறுமை மற்றும் சமூக அநீதிகளால் இச்சேரி மக்கள் எதிர்நோக்கும் துன்பங்களைப் பகிர்ந்து கொண்டனர். சேரி வாழ் சிறார் திருத்தந்தைக்கு ஒரு தொப்பியை அணிவித்தனர். திருத்தந்தை அவ்விடத்தில் ஒலிவமரக் கன்று ஒன்றை நட்டார். Banado Norte சேரியில் உரையாற்றிய திருத்தந்தை, சேரி மக்கள் ஒன்றிணைந்து தங்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். Banado Norte சேரியில் இச்சந்திப்பை நிறைவு செய்து திருத்தந்தை திரும்புகையில், பலர் அவரைத் தொடுவதற்கு முயற்சித்தனர். இச்சேரியில் 1952ம் ஆண்டில் குடியேறிய 82 வயது Francisca de Chamorra என்ற மூதாட்டி, நான் இப்போது அமைதியாக இறப்பேன், சகதி நிறைந்த இந்த இடத்திற்குத் திருத்தந்தை வருகை தந்தது ஒரு புதுமை என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். இத்தகைய வறிய மக்கள்மீது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வைத்திருக்கும் அன்பை, அவர், திருத்தந்தையாகப் பொறுப்பேற்பதற்கு முன்னும், அப்பணியை ஏற்ற பின்னரும் பல தெளிவான பிறரன்புச் செயல்களால் திருத்தந்தை காட்டி வருகிறார் என நாம் குறிப்பிடத் தேவையில்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.