2015-07-12 14:52:00

“Niños de Acosta Ñu” சிறார் மருத்துவமனை சந்திப்பு


ஜூலை,12,2015. பரகுவாய் நாட்டில், ஜூலை,11, இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 8 மணிக்குத் திருத்தூதுப் பயண நிகழ்வுகளைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். அசுன்சியோன் திருப்பீடத் தூதரகத்திலிருந்து இருபது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற “Niños de Acosta Ñu” சிறார் மருத்துவமனைக்குச் சென்று, அவசர சிகிச்சைப் பிரிவுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த மேடையில் அங்குப் பணியாற்றும் நலப்பணியாளர்கள், நோயாளிச் சிறார் மற்றும் அவர்களின் உறவினர்களைச் சந்தித்தார் திருத்தந்தை. இவர்களுக்கென தயார் செய்திருந்த உரையை வழங்காமல் இயேசுவின் வாழ்விலிருந்து ஒரு நிகழ்வைக்(மத்.19:14) குறிப்பிட்டுப் பேசினார். சிறார் எதிர்கொள்ளும் துன்பங்கள் பற்றிப் பேசி, அவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் தனது அன்பையும் செபத்தையும் தெரிவித்தார். நோயாளிச் சிறாருக்குச் சிகிச்சை வழங்கும் எல்லாரையும் ஊக்குவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறாரின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிமார்களிடம், இவர்கள் ஒருபுறம் அனுபவிக்கும் மனவேதனை மறுபுறம் அனுபவிக்கும் அளவில்லாத மகிழ்வு பற்றிக் குறிப்பிட்டார் திருத்தந்தை. மருத்துவமனையில் மனதை வேதனைப்படுத்தும் நேரங்கள் உண்டு, அதேசமயம் மகிழ்ச்சி தரும் சமயங்களும் உண்டு. அவர்கள் அனைவரும் குடும்பமாக ஒருவர் ஒருவரைத் தேற்றுவது மகிழ்ச்சி தருகின்றது என்று கூறினார் திருத்தந்தை. பின்னர் இயேசுவிடம் செபிக்க மறக்க வேண்டாம் என சிறாரிடம் கூறினார் திருத்தந்தை.

இச்சிறார் மருத்துவமனையிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற Caacupè அன்னை மரியா திருத்தலம் சென்றார் திருத்தந்தை. Caacupè என்பதற்கு, குவாரானி மொழியில், மலைக்குப் பின்னால் என்று அர்த்தம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.