2015-07-12 15:23:00

கிறிஸ்துவோடு ஒன்றிணைந்து வாழுமாறு துறவியருக்கு வலியுறுத்தல்


ஜூலை,12,2015. இறைவனால் அழைக்கப்பட்ட ஒருவர், பெருமையையோ அங்கீகாரத்தையோ தேடமாட்டார். பிறரைவிட சிறந்தவராக, பீடத்தின்மேல் நிற்கும் ஒருவராகத் தன்னை நோக்கமாட்டார். கிறிஸ்து இறைவனாக இருந்தும் இறைவனுக்கு இணையான நிலையைப் பிடித்துக்கொண்டிருக்கவில்லை. கிறிஸ்துவின் இப்பண்பையும், அவரின் செபவாழ்வையும் பின்பற்றுங்கள். இதுவும் நம் அழைப்பின் ஓர் அங்கம். இறைவன், பிறர் மற்றும் படைப்புமீது நமக்குள்ள அன்பின் பிரதிபலிப்பு செபம். அன்புக் கட்டளையை நிறைவேற்றுதல், இயேசுவோடு ஒத்துச்செல்லும் சீடத்துவ மறைப்பணியாகும். செபம், விசுவாசத்தைச் செயல்பட வைக்கின்றது. ஏழைகளைத் தூசியிலிருந்து எழுப்புதல், வறண்ட நிலங்களை வளமான நிலங்களாக மாற்றுதல், மனித வாழ்வை தாயின் கருவிலிருந்து இயற்கையான மரணம் வரை பாதுகாத்தல் போன்ற செயல்களில் ஈடுபடத் தூண்டும். பிறப்பு முதல் முதுமை வரை மனித வாழ்வின் மாண்பைப் பாதுகாத்து அதற்காகப் போராட வேண்டியது நம் கடமை. நாம் அனைவரும் சேர்ந்து செபிப்பது எத்துணை அழகாக உள்ளது. திருவழிபாட்டுச் செபம், அகிலத் திருஅவை கிறிஸ்து போன்று வாழ்வதற்கு முயற்சிப்பதன் வெளிப்பாடாகும். துறவிகளும், அருள்பணியாளர்களும் பல்வேறு அழைப்புகளை மதித்து உரையாடலில் ஈடுபட வேண்டும். இவ்வாறு பரகுவாய் நாட்டு அருள்பணியாளர், துறவியர் மற்றும் கத்தோலிக்க இயக்கப் பிரதிநிதிகளிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.