2015-07-11 16:25:00

பரகுவாய் நாடு, ஒரு கண்ணோட்டம்


ஜூலை,11,2015. பரகுவாய் நாடு, தென் அமெரிக்காவின் மத்தியில் அமைந்துள்ள ஒரு குடியரசாகும். வடகிழக்கில் பிரேசிலும், தெற்கிலும் தென்மேற்கிலும் அர்ஜென்டினாவும், வடமேற்கில் பொலிவியாவும் எல்லை நாடுகளாக அமைந்துள்ளன. பராகுவாய் நாட்டுப் பகுதியில், 1516ம் ஆண்டில் இஸ்பானிய நாடுகாண் பயணிகள் சென்றதோடு அப்பகுதியில் ஐரோப்பியர்களின் நுழைவு தொடங்கியது. இஸ்பானிய நாடுகாண் பயணி Juan de Salazar de Espinosa அவர்கள், 1537ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி Asunción நகரில் முதல் குடியிருப்பை உருவாக்கினார். 1811ம் ஆண்டு மே 14ம் தேதி இஸ்பானிய நிர்வாகத்தை அகற்றி சுதந்திர நாடானது பரகுவாய். இந்நாட்டின் முதல் சர்வாதிகாரி ஹோசே கஸ்பார் ரொட்ரிகெஸ் பிரான்ச்சா என்பவர் 1814 முதல் 1840 வரை ஆட்சி செய்தார். 16ம் நூற்றாண்டில் இஸ்பானியர்கள் இந்நாட்டிற்கு வருவதற்கு குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே குவாரானி பூர்வீக மக்கள் இந்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். இஸ்பானிய குடியேற்றதாரரும், இயேசு சபை மறைப்பணியாளர்களும் இந்நாட்டில் கிறிஸ்தவத்தைக் கொண்டு வந்தனர். 1864 முதல் 1870 வரை நடந்த பரகுவாய்ச் சண்டையில் 60 முதல் 70 விழுக்காட்டு மக்கள் இறந்தனர். மேலும், ஏறக்குறைய 1,40,000 சது கிலோ மீட்டர் பகுதி, அர்ஜென்டீனா மற்றும் பிரேசில் நாடுகளுக்குச் சொந்தமாயின. பரகுவாய், 20ம் நூற்றாண்டில் தொடர்ந்து சர்வாதிகாரி ஆட்சிகளை எதிர்கொண்டது. 1954 முதல் 1989 வரை ஆட்சி சர்வாதிகாரி செய்த Alfredo Stroessner என்பவரின் ஆட்சி. தென் அமெரிக்காவில் நீண்டகால இராணுவ சர்வாதிகார ஆட்சியாக அமைந்திருந்தது. இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பில் இவர் பதவி இழந்தார். 1993ல் முதல் பலகட்சித் தேர்தல்கள் நடந்தன. 2009ம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 65 இலட்சமானது. குவாரனியும் இஸ்பானியமும் ஆட்சி மொழிகளாக உள்ளன. இயற்கை வளம் மிகுந்த நாடு பரகுவாய். பரகுவாய் மக்கள் தொகையில் அறுபது விழுக்காட்டினர் நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள். இங்கு 30 முதல் 50 விழுக்காட்டினர் பல்வேறு வறுமை நிலைகளிலும்,  19 விழுக்காட்டினர் வறுமைக்கோட்டிற்குக் கீழும், 71 விழுக்காட்டினர் கிராமங்களிலும் வாழ்கின்றனர். இந்நாட்டில் திருத்தந்தை திருத்தூதுப் பயணத் திட்டங்களை இஞ்ஞாயிறு மாலை முடித்து வருகிற திங்கள் மதியம் 1.45 மணிக்கு உரோம் வந்தடைவார். இத்துடன் திருத்தந்தையின் 9வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் நிறைவுபெறும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.