2015-07-11 16:09:00

பரகுவாய் அரசு, தூதரக அதிகாரிகளுக்கு திருத்தந்தை உரை


ஜூலை,11,2015. வரவேற்பை அள்ளி வழங்கும் இந்நாட்டில் நான் அதன் ஓர் அங்கமாக உணர்வது கடினமல்ல. அமெரிக்காவின் இதயம் என்று அழைக்கப்படுகின்ற பரகுவாய் நாடு தனது புவியியல் அமைப்பால் மட்டுமல்ல, தனது மக்களின் இனிய விருந்தோம்பல் மற்றும் நட்புப் பண்பாலும் இவ்வாறு போற்றப்படுகின்றது. இந்நாடு, சுதந்திரம் அடைந்த ஆரம்ப நாள்களிலிருந்து அண்மைக் காலங்கள் வரை, போர், சகோதரத்துவச் சண்டை மற்றும் மனித உரிமைகள் அவமதிப்பால் கடும் துன்பங்களை அனுபவித்துள்ளது. எவ்வளவு துன்பங்கள், மரணங்கள். ஆயினும், துன்பங்களை  மேற்கொள்வதிலும், வளமையும் அமைதியும் நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதிலும் பராகுவாய் வியப்புக்குரிய மனஉறுதியைக் காட்டுகின்றது. இந்நாட்டுப் பெண்கள், தாய்களாக, மனைவிகளாக, கைம்பெண்களாக தங்களின் தோள்களில் மிகக் கடினமான பாரங்களைச் சுமந்தனர். ஊழலை ஒழிப்பதில் குறிப்பிடத்தக்கப் பணியாற்றினர். புதிய தலைமுறைகளில் நல்லதோர் எதிர்காலத்தின் நம்பிக்கையை விதைத்து, தங்களின் குடும்பங்களும், நாடும் முன்னோக்கிச் செல்லும் வழிகளைக் கண்டனர். மக்கள் தங்கள் நாட்டின் வரலாற்றை அறிய வேண்டியது இன்றியமையாதது. ஏனெனில் அது, போரின் கொடுமைகளையும் அர்த்தமற்றதன்மையையும் உணரச் செய்கின்றது. சகோதரர்களுக்கிடையேயான போர்களுக்கு முடிவு வரட்டும். நாம் எப்போதும் அமைதியை கட்டியெழுப்புவோம். ஒவ்வொரு நாளும் உறுதியாக வளரும் அமைதி, ஒவ்வொரு நாள் வாழ்விலும் உணரப்படும் அமைதி, ஆணவத்தின் அடையாங்களையும், புண்படுத்தும் சொற்களையும், இகழ்ச்சியையும் தவிர்க்கும் வழிகளைத் தேடட்டும். அதன்வழியாக, புரிந்துகொள்தல், உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கு உழைக்கும்   அமைதி வளரட்டும். கலாச்சாரச் சந்திப்பின் அடிப்படையில், பிறரின் நியாயமான கருத்துக்களையும் வேறுபாடுகளையும் ஏற்று மதிப்பதில், பொது நலனை ஊக்குவிப்பதற்கு உரையாடல் முக்கியம். தொடர்ந்து இடம்பெறும் மோதலைத் தவிர்க்கும் முயற்சியில், கருத்தியல் அல்லது தேசப்பற்றினால் பிறக்கும் உறுதிப்பாடுகள், நாட்டின் மற்றும் நாட்டு மக்களின் அன்போடு ஒத்துப்போக வேண்டும். அந்த அன்பு, ஒளிவுமறைவற்ற நிர்வாகம் அதிகரிப்பதற்கும், ஊழலை ஒழிப்பதற்கான இடைவிடாத முயற்சிக்கும் தூண்டுதலாக இருக்க வேண்டும்.

தான் தயார் செய்திருந்த உரையை வழங்கிக் கொண்டு வந்த திருத்தந்தை, பரகுவாய் மக்கள் ஊழலுக்கு எதிராகப் போராடுவதில் உறுதியாய் உள்ளார்கள் என்று கூறி உரையை மேலும் தொடர்ந்தார்.

சிறார், பள்ளிக்குச் செல்ல வசதியின்றியும், குடும்பங்கள், வீடுகள் இன்றியும், தொழிலாளர், மாண்புடைய வேலையின்றியும், சிறு விவசாயிகள், பயரிடுவதற்கு நிலமின்றியும், பூர்வீக மக்கள் தங்களின் இடங்களைவிட்டு கட்டாயமாக வெளியேறி நிச்சயமில்லாத எதிர்காலத்தை உணர்வதற்குத் தள்ளப்பட்டும்... இவ்வகையான நிலைகள் ஒருபோதும் இனிமேல் ஏற்படாதபடி அனைத்து சமூகக்  குழுக்களும் உழைப்பதற்கு உறுதி எடுப்பார்களாக. வன்முறை, ஊழல் மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் முடிவுக்கு வருவதாக. Caacupé அன்னைமரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்நாட்டுக்கு வந்திருப்பதில் மிகவும் மகிழ்வடைகிறேன். இந்த அன்பு பராகுவாய் மக்கள் அனைவர் மீதும், உங்கள் ஒவ்வொருவர் மீதும், உங்கள் குடும்பங்கள் மீதும் நம் ஆண்டவரின் ஆசிர் பொழியப்பட செபிக்கிறேன். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.