2015-07-10 15:59:00

பொலிவியாவின் சாந்தா குரூஸ் நகரில் திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூலை,10,2015. தென் அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதியில், நான்கு பக்கங்களும் நிலத்தால் சூழப்பட்டுள்ள நாடு பொலிவியா. வடக்கு மற்றும் கிழக்கே பிரேசிலும், தென்கிழக்கே பராகுவேயும், தெற்கே அர்ஜென்டினாவும், தென்மேற்கே சிலேயும், மேற்கே பெருவும் இந்நாட்டின் எல்லைகளாக அமைந்துள்ளன. இலத்தீன் அமெரிக்காவில் அதிகமான பூர்வீக இனங்களைக் கொண்டுள்ள நாடு பொலிவியா. இந்நாட்டின் மக்கள் தொகையில் அறுபது விழுக்காட்டினர் பூர்வீக இனத்தவர். ஏறக்குறைய முப்பது பூர்வீக இனங்களைச் சார்ந்தவர்கள் இந்நாட்டில் வாழ்கின்றனர். கடல்மட்டத்திற்கு மேலே, 90 மீட்டர் முதல் 6,542 மீட்டர் உயரமான பகுதிகளைக் கொண்டுள்ள இந்நாட்டில், பெருமளவான அரிய பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன. வார்த்தையால் வர்ணிக்க முடியாத ஏரிகள், உயரமான மலைகள், பள்ளத்தாக்குகள், அமேசான் பகுதி, பாலைநிலங்கள், என, தனிப்பட்ட இயற்கை அழகால் இந்நாடு இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே கூறினார். பல அழகான இயற்கைப் பூங்காக்களையும் பொலிவியா நாடு கொண்டுள்ளது. தாய் பூமியின் உரிமைகள் சட்டத்தை அமல்படுத்திய பொலிவியா நாடு, மனிதர்களுக்குப் போல, இயற்கைக்கும் உரிமைகளைக் கொண்டுவந்தது என்று உலகினரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இந்நாட்டின் தலைநகர் La Pazன் El Alto விமான நிலையத்தை ஜூலை 08, இப்புதன் மாலை 4.15 மணிக்குச் சென்றடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நகரில் அரசுத்தலைவரைச் சந்தித்து, அரசு அதிகாரிகளுக்கு உரை நிகழ்த்தினார். பின்னர் La Paz நகரிலிருந்து சாந்தா குரூஸ் நகருக்குச் சென்றார். இத்துடன் அந்நாட்டிற்கான திருத்தந்தையின் முதல் நாள் பயண நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.

பொலிவியா நாட்டிற்கான திருத்தூதுப் பயணத்தின் இரண்டாவது நாளான, ஜூலை,09, இவ்வியாழனன்று, சாந்தா குரூஸ் கிறிஸ்து மீட்பர் வளாகத்தில் திருப்பலி, பொலிவியா நாட்டின் குருக்கள், துறவியர் மற்றும் குருத்துவ மாணவர்கள் சந்திப்பு, ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள், பொருள் இல்லாதவர்கள், வாய்ப்பிழந்தவர்கள் போன்றோரைக் கொண்ட சமூகநல இயக்கங்களின் 2வது உலக மாநாட்டினருக்கு உரை என மூன்று முக்கிய நிகழ்வுகளை நிகழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.