2015-07-10 16:01:00

நம் குழுக்களின் வாழ்வில் இயேசுவின் பணிக்கு நாம் சாட்சிகள்


ஜூலை,10,2015. வழியோரத்தில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த பார்வையற்ற பர்த்திமேயு, பார்வை பெறும் நற்செய்திப் பகுதியை மையமாக வைத்து, பொலிவியா நாட்டின் அருள்பணியாளர், துறவியர் மற்றும் குருத்துவ மாணவர்களுக்கு உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த நிகழ்வில், ஒருபக்கம் பார்வையற்றவரின் கத்தல், மறுபக்கம், சீடர்கள் பலவிதமாக நடந்து கொண்டது ஆகிய இரண்டும் உள்ளது. இந்த நிகழ்வை எழுதியுள்ள மாற்கு நற்செய்தியாளர், பார்வையற்ற பர்த்திமேயுவின் கத்தல், மக்களின் வாழ்விலும், சீடர்களின் வாழ்விலும் ஏற்படுத்திய தாக்கத்தை நமக்குக் காட்ட விரும்பியதாகத் தெரிகிறது. சிலர் பர்த்திமேயுவைக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றனர். இன்னும் சிலர், அவரைப் பேசாதிருக்குமாறு அதட்டினர். ஆனால் இயேசு, பொறுமையுடனும், கனிவுடனும், நிதானத்துடனும் பர்த்திமேயுவின் கத்தலுக்குப் பதில் சொல்கிறார். சீடர்கள், நம் ஆண்டவர் இயேசுவின் பிரதிநிதிகளாக, அந்தப் பார்வையற்ற பிச்சைக்காரரிடம், இயேசுவின் வார்த்தைகளால் ஆறுதலையும் ஊக்கத்தையும் அளித்தனர். “துணிவுடன் இரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்” என்றார்கள். இதுவே சீடத்துவத்தின் அளவுகோல். இதுவே தூய ஆவியார் நம்மோடு, நம்மில் ஆற்றுவது. நாம் இதன் சாட்சிகள். நம் வேதனைகள் மற்றும் துன்பங்களில் உழன்று கிடப்பதை இயேசு ஒருநாள் சாலையோரம் பார்த்தார். அவர் நம் கத்தல்களுக்குத் தம் காதுகளை மூடிக்கொண்டிருக்கவில்லை. “துணிவுடன் இரும், எழுந்து வாரும்” என்று நம்மிடம் கூறிய பலரின் சாட்சிய வாழ்வுக்கு நன்றி சொல்வோம். ஒளியைப் பார்க்க வைத்த இந்த கருணைநிறை அன்பை, மாற்றம்தரும் அன்பை நாம் மெதுமெதுவாக அனுபவித்தோம். கருத்தியலுக்கோ, ஒரு குறிப்பிட்ட இறையியலுக்கோ நாம் சாட்சிகள் அல்ல. நம் குழுக்களின் வாழ்வில் இயேசுவின் பணிக்கு நாம் சாட்சிகள்.

இந்தப் பயணத்தில் நாம் தனியாக இல்லை. நம் செபங்கள் மற்றும் எடுத்துக்காட்டுகள் மூலம் நாம் ஒருவர் ஒருவருக்கு உதவுகிறோம். உலகின் ஒவ்வொரு மூலையிலும் தமது ஒளி சென்றடைவதற்கு இயேசு நம்மைப் பயன்படுத்த விரும்புகிறார்.

பொலிவியா நாட்டின் அருள்பணியாளர், துறவியர் மற்றும் குருத்துவ மாணவர்களுக்கு இவ்வாறு உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.