2015-07-09 17:08:00

விருந்தாளியாக, திருப்பயணியாக பொலிவியாவுக்கு வந்துள்ளேன்


ஜூலை,09,2015. அன்பு வார்த்தைகளால் எனக்கு இனிய வரவேற்பளித்த அரசுத்தலைவருக்கும், அரசு அதிகாரிகள், சகோதரர் ஆயர்கள், பொதுநிலையினர் மற்றும் பொலிவியாவிலுள்ள எல்லாருக்கும் நன்றி. இன்னும், பல்வேறு காரணங்களுக்காக வேறு நாடுகளில் வாழும் பொலிவிய மக்களையும் சிறப்பான விதத்தில் நினைக்கிறேன். உயரமான மலைகள், பள்ளத்தாக்குகள், அமேசான் பகுதி, பாலைநிலங்கள், ஒப்பிடமுடியாத ஏரிகள் என, தனிப்பட்ட இயற்கை அழகால் இந்நாடு இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. இந்த அழகு நாட்டில் இருப்பதில் மகிழ்வடைகிறேன். பொலிவியா தனது மக்களிலே ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பெரும் கலாச்சார மற்றும் இனங்கள் வாழும் இந்நாடு, ஒருவர் ஒருவரை மதிப்பதிலும், உரையாடலிலும் சிறந்த தூண்டுதலாகவும் உள்ளது. இம்மண்ணுக்கு கொண்டுவரப்பட்ட இஸ்பானிய மொழியோடு 36 பூர்வீக மொழிகளும் நிலவுவது,  (Kantuta மற்றும் Patujú தேசிய மலர்களின் சிவப்பும் மஞ்சளும் இந்நாட்டின் கொடியில் இருப்பது போன்று) பன்மைத்தன்மையில் அழகையும் ஒற்றுமையையும் காட்டுகிறது. இந்நாட்டில் நற்செய்தி அறிவிப்பு ஆழமாக வேரூன்றியுள்ளது. 

விருந்தாளியாக, திருப்பயணியாக, உயிர்த்த கிறிஸ்துவில் நம்பும் அனைவரையும் விசுவாசத்தில் உறுதிப்படுத்த வந்துள்ளேன். பொலிவியா தனது பொருளாதார, சமூக மற்றும் அரசியல் வாழ்வில் பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தனியாள்கள், சிறுபான்மையினர் மற்றும் இயற்கையியல் உரிமைகள் பாதுகாப்பு நாட்டின் அரசியல் அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த இலக்குகளை எட்டுவதற்கு, உரையாடலும், ஒத்துழைப்பும் அவசியம். சமூகத்தில் யாரும் ஒதுக்கப்படக் கூடாது. இந்நாட்டில் வருகின்ற நாள்களில் இறையழைத்தலை ஊக்குவிக்க உள்ளேன்.    திருஅவை இளையோர் மீது சிறப்பு அக்கறை கொண்டுள்ளது. ஒரு சமுதாயம் தனது முதியோரைப் பாதுகாத்து மதிக்கும்போது அது புதுப்பிக்கப்பட்ட சக்தியைப் பெறுகின்றது. அமைதியை விரும்பும், அமைதிக் கலாச்சாரத்தையும் உரிமையையும் ஊக்குவிக்கும், இந்நாட்டில் இருப்பதில் மகிழ்கிறேன். இறைவன் பொலிவியாவை ஆசிர்வதிப்பாராக என்று பொலிவியா நாட்டிற்கான தனது முதல் உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.