2015-07-09 18:00:00

பொலிவியாவில் திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூலை,09,2015. இப்புதன் பொலிவியா நேரம் மாலை 4.15 மணிக்கு, பொலிவியா நாட்டுத் தலைநகர் La Pazன் El Alto விமான நிலையம் சென்றடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமைதி என்று பொருள்படும் La Paz நகரில் அரசு அலுவலகங்கள் உள்ளன. கடல் மட்டத்திற்கு 13,500 அடி உயரத்திலுள்ள La Pazன் El Alto விமான நிலையம் உலகத்திலேயே மிக உயரத்திலுள்ள விமான நிலையமாகும். உயரமான ஒன்று என்ற பொருளில், El Alto என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இவ்வளவு உயரத்தில் மூச்சுத்திணறல் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, 78 வயதான மற்றும் ஒரு நுரையீரலைக் கொண்டுள்ள திருத்தந்தைக்கு விமானத்தில் Trimate என்ற தேனீர் வழங்கப்பட்டது. இது coca இலையால் தயாரிக்கப்பட்டது. உயரமான இந்த இடத்தை முன்னிட்டு திருத்தந்தை இந்நகரில் சில மணி நேரங்களே செலவிட்டார். திருத்தந்தை விமானத்திலிருந்து இறங்கியபோது நல்ல உடல் நலத்துடன் காணப்பட்டார். மரபு ஆடைகளை உடுத்தியிருந்த நூற்றுக்கணக்கான சிறாரும் பெரியவர்களும் விமான நிலையத்தில் நின்றுகொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ், எம் நண்பர், பொலிவியா உங்களோடு இருக்கின்றது என்று பாடிக்கொண்டு திருத்தந்தையை வரவேற்றனர்.

பொலிவியா நாட்டில் பூர்வீக இன முதல் அரசுத்தலைவராகிய Evo Morales அவர்கள் திருத்தந்தையை விமான நிலையத்தில் வரவேற்றுப் பேசினார். இவ்வரவேற்பு நிகழ்வில் திருத்தந்தையும் பொலிவியா நாட்டிற்கான தனது முதல் உரையை வழங்கினார்.

பின்னர் அங்கிருந்து 13 கிலோ மீட்டர் தூரம் திறந்த காரில் லா பாஸ் பேராயர் இல்லத்திற்குச் சென்றார். சாலையில் மக்கள் இரு பக்கங்களிலும் நின்று மலர்களைத் தூவினர். திருத்தந்தை சென்ற கார் மலர்களால் நிறைந்திருந்து. வழியில், இஸ்பானிய இயேசு சபை அருள்பணியாளர் Luis Espinal Camps அவர்களின் உடல், 1980ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இறங்கி சிறிய செபம் செய்த பின்னர் மீண்டும் காரில் ஏறிச் சென்றார் திருத்தந்தை. லா பாஸ் பேராயர் இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர் அரசுத்தலைவர் மாளிகை சென்று அங்கு மரியாதை நிமித்தம் அரசுத்தலைவர் Evo Morales அவர்களைச் சந்தித்தார் திருத்தந்தை. இவருக்கு அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த உரோம் அன்னைமரியா படத்தைப் பரிசாக வழங்கினார் திருத்தந்தை. அரசுத்தலைவர் Evo Morales அவர்களும், திருத்தந்தைக்கு, சுத்தியலாலான சிலுவை ஒன்றைப் பரிசாக அளித்தார்.

பின்னர் La Paz நம் அன்னை பேராலயம் சென்றார் திருத்தந்தை. அங்கு, பொலிவியா நாட்டின் அரசு அதிகாரிகள், தூதரக, கலாச்சார மற்றும் பொதுமக்கள் சமுதாயத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றினார். சமுதாயத்தின் பொது நலனை ஊக்குவித்து, சமுதாயம் எதிர்நோக்கும் சவால்களுக்குத் தீர்வு காணுமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சந்திப்பில் முதலில் La Paz பேராயர் முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். அப்போது உள்ளூர் நேரம் இப்புதன் இரவு 7.30 மணியாகும். பின்னர் அங்கிருந்து El Alto  விமான நிலையம் சென்று, Santa Cruz de la Sierra நகருக்குப் புறப்பட்டார்  திருத்தந்தை. ஒரு மணி 15 நிமிடங்கள் பயணம் செய்து Santa Cruz நகரின்  Viru Viru பன்னாட்டு விமான நிலையம் அடைந்தார். பொலிவியா நாட்டில் மக்கள் தொகை அதிகமாக உள்ள புதிய பொருளாதார நகரமான சாந்தா குரூஸ், 1561ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. Viru Viru விமான நிலையத்திலிருந்து திறந்த காரில் Santa Cruz உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் இல்லம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது உள்ளூர் நேரம் இரவு 10 மணியாகும். இந்திய இலங்கை நேரம் இவ்வியாழன் காலை 7.30 மணியாகும். இத்துடன் பொலிவியா நாட்டிற்கான முதல் நாள் பயண நிகழ்வுகள் முற்றுப் பெற்றன. இவ்வெள்ளியன்று பராகுவாய் நாடு செல்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.