2015-07-09 18:10:00

பொலிவியா நாடு, ஒரு கண்ணோட்டம்


ஜூலை,09,2015. பொலிவியா நாடு, தென் அமெரிக்காவின் மத்திய பகுதியில், மேற்கே நான்கு பக்கங்களும் நிலத்தால் சூழப்பட்டு அமைந்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கே பிரேசிலும், தென்கிழக்கே பராகுவேயும், தெற்கே அர்ஜென்டினாவும், தென்மேற்கே சிலியும், மேற்கே பெருவும் அமைந்துள்ளன. தங்கம், வெள்ளி, செம்பு, ஆன்டிமனி, டங்ஸ்டன், தகரம் ஆகிய கனிமவள உற்பத்தியில் இந்நாடு உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நெல், ஓட்ஸ், வாழை, கோதுமை, பார்லி போன்றவை விவசாயம் செய்யப்படுகின்றன. ஆடு வளர்ப்பு, பெட்ரோலியம், கனிமம் சுத்திகரிப்பு, நெசவுத்தொழில் போன்ற தொழில்கள் இந்நாட்டில் நடைபெறுகின்றன. இஸ்பானிய காலனியின் போது பொலிவியா நாடு, Upper Peru என்ற பெயரில் நிர்வகிக்கப்பட்டது. 1809ம் ஆண்டில் இஸ்பானிய காலனி ஆதிக்கத்திற்கு எதிராக முதல் சுதந்திரப் போராட்டம் ஆரம்பமானது. இப்போர் 16 ஆண்டுகள் நடைபெற்றது. அதன் முடிவில், இஸ்பானிய-அமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார் என்பவரின் பெயரில், 1825ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி பொலிவியா குடியரசு உருவானது. பொலிவியா நாட்டு மக்கள் தொகையில் அறுபது விழுக்காட்டினர், ஏறக்குறைய முப்பது பூர்வீக இனங்களைச் சார்ந்தவர்கள். இலத்தீன் அமெரிக்காவில் அதிகமான பூர்வீக இனங்களைக் கொண்டுள்ள நாடு பொலிவியா.

கடல்மட்டத்திற்கு மேலே, 90 மீட்டர் முதல் 6,542 மீட்டர் உயரமான பகுதிகளைக் கொண்டுள்ள இந்நாட்டில், பெருமளவான அரிய பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன. 32 இயற்கையியல் பகுதிகளும், 199 இயற்கையியல் அமைப்புகளும் உள்ளன. 1,200க்கும் மேற்பட்ட பெரணி வகைகள் உட்பட 17 ஆயிரத்துக்கு அதிகமான தாவர வகைகளும், குறைந்தது 800 வகை காளான் வகைகளும், மூவாயிரத்துக்கு மேற்பட்ட மருந்துவகைச் செடிகளும், 1,500 பாசி வகைகளும் உள்ளன. 1,400க்கும் மேற்பட்ட பறவை வகைகளும், 398 பாலூட்டிகளும் உட்பட 2,900க்கு மேற்பட்ட விலங்கு வகைகளும் உள்ளன.  நான்காயிரத்துக்கு அதிகமான உருளைக்கிழங்கு வகைகளை பொலிவியா உற்பத்தி செய்கிறது. தாய் பூமியின் உரிமைகள் சட்டத்தை அமல்படுத்திய பொலிவியா நாடு, மனிதர்களுக்குப் போல, இயற்கைக்கும் உரிமைகள் கொண்டுவந்தது உலகினரின் பாராட்டைப் பெற்றுள்ளது. 1831ம் ஆண்டில் இந்நாட்டில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டது.

பொலிவியா நாட்டின் அரசுத்தலைவரான ஹுவான் ஈவோ மொராலிஸ் அய்மா அவர்கள், தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியில் உள்ளார். முதல்முறை அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருக்குக் கிடைத்த வாக்குகள் 54%; தற்போது கிடைத்திருக்கும் வாக்குகள் 60%. சனநாயக நாடுகளில் மூன்றாவது முறை இவ்வளவு அதிக வாக்குகளைப் பெற்று ஒருவர் அதிபராக ஆகியிருப்பது பெரிய சாதனையாகச் சொல்லப்படுகிறது. இயற்கை எரிவாயு, பெட்ரோலிய எண்ணெய் வயல்கள், கனிமங்கள் ஆகியவற்றை அரசுடமையாக்கி, அதில் கிடைக்கும் வருமானத்தை நாட்டு மக்களிடையே பகிர்ந்தளித்ததால் ஏழைகளிடத்தில் அவருக்குச் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. முதியோர்களுக்கும் குழந்தைகளுக்குமான நிதியுதவிகளைக் கணிசமாக உயர்த்தியிருக்கிறார். கல்விக்கும், நலவாழ்வுக்கும் நிறையச் செலவழிக்கிறார். 100 வுழுக்காடு எழுத்தறிவு பெற்ற நாடு என்பது பொலிவியாவின் தனிச்சிறப்பு. கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை வறுமைக்கோட்டுக்கும் மேலே உயர்த்தியிருக்கிறார் அரசுத்தலைவர் ஈவோ மொராலிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.