2015-07-09 16:58:00

ஈக்குவதோர் குருக்கள், துறவியர், குருமாணவரிடம் திருத்தந்தை


ஜூலை,09,2015. ஈக்குவதோர் நாட்டில் 48 மணி நேரங்கள் திருத்தூதுப் பயண நிகழ்வுகளை நிகழ்த்தியபோது, மற்ற இடங்களில் பார்த்ததைவிட சற்று வித்தியாசமாகப் பார்த்தேன். எங்கு சென்றாலும் எப்போதும் மகிழ்ச்சியுடன் ஆரவாரத்துடன் சமய உணர்வுடன் பக்தியுடன் மக்கள் வரவேற்பளித்தனர். ஆனால் ஈக்குவதோரில், பக்தியில், மக்கள் செயல்பட்ட முறையில் சற்று வேறுபாட்டை உணர்ந்தேன். எடுத்துக்காட்டுக்கு, வயதானவர் முதல் குழந்தைகள்கூட செபத்தில் இரு கைகளைக் குவிப்பதுபோல் குவித்து ஆசிர்வாதம் கேட்டனர். இந்த மக்களிடம் காணப்படும் இந்த வேறுபாட்டுக்கு காரணம் என்னவென்று நானும் இயேசுவிடம் எனது செபத்தில் கேட்டேன். இன்று காலையில் செபித்துக்கொண்டிருந்தபோது இவ்வாறு எனது மனதில் தோன்றியது. இயேசுவின் திருஇதயத்திற்கு இந்நாடு அர்ப்பணிக்கப்பட்டிருப்பது, பல ஆண்டுகளுக்கு முன்னர் அன்னைமரியின் திருஇதயத்துக்கும் ஈக்குவதோர் நாடு அர்ப்பணிக்கப்பட்டது, இந்த அருளிலிருந்து, இந்தப் பக்தியிலிருந்து இம்மக்கள் வித்தியாசமாகக் காணப்படுகிறார்கள் என்று உணர்ந்தேன். எனவே, ஈக்குவதோர் நாட்டு குருக்கள், துறவியர் மற்றும் குருத்துவ மாணவர்களாகிய உங்களுக்குகென நான் தயார் செய்திருந்த உரையை வாசிக்க எனக்குத் தோன்றவில்லை. இதை உங்கள் துறவியர் பேரவைத் தலைவரிடம் கொடுக்கிறேன். அதை அவர் பின்னர் பிரசுரிப்பார். இப்பொழுது எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன் எனப் பேசத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்னை மரியாவைப் பற்றி நினைக்கும்போது, கன்னி, மரியா ஆகிய இரண்டு சொற்களும், “உம் சொற்படியே எனக்கு ஆகட்டும்”, “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” ஆகிய இரு வாக்கியங்களுமே எனக்கு நினைவுக்கு வருகின்றன. மரியா எதிலும் கதாநாயகராக, முக்கியமானவராக ஒருபோதும் விளங்கவில்லை, மாறாக, மரியா தமது வாழ்வு முழுவதும் சீடராக, தமது மகன் இயேசுவின் முதல் சீடராக வாழ்ந்தார். தம் வழியாக வரும் அனைத்தும் இறைவனின், முழுவதும் கைம்மாறு கருதாத தன்மையிலிருந்து வரும் நன்கொடை என்பதை அறிந்திருந்தார். எனவே, இறைவனின் இக்கொடையை மரியா வெளிப்படுத்தினார். எனவே குருக்கள், துறவியர் மற்றும் குருத்துவ மாணவர்களாகிய உங்களிலும் இறைவனின் இலவசக் கொடைக் காட்டப்பட்டுள்ளது. குருத்துவ, துறவற வாழ்வில் சேர்வதற்கு நீங்கள் நுழைவுக்கட்டணம் செலுத்தவில்லை. அதற்கு நீங்கள் தகுதிவாய்ந்தவர்களும் அல்ல. அது தகுதிவாய்ந்ததாய் இருப்பதற்கு நீங்கள் எதுவும் செய்யவில்லை. ஆதலால் நீங்கள் ஆண்டவரிடமிருந்து இலவசமாகப் பெற்றதை அவருக்குத் திருப்பிக் கொடுங்கள். ஒவ்வொரு நாளும் இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் கிறிஸ்துவை உற்றுநோக்கி உங்கள் வாழ்வில் நீங்கள் இலவசமாகப் பெற்றுள்ள அனைத்திற்கும் நன்றி கூறுங்கள். புதிய இடத்திற்குப் பணிசெய்வதற்கு அனுப்பப்படுவது போன்ற காரியங்கள் கடினமாக இருந்தாலும், இதுவும் இறைவனிடமிருந்து இலவசமாகப் பெற்ற கொடைகளின் ஒரு பகுதியே. நாம், இறைவன் இலவசமாக வழங்கிய கொடைகளின் காட்சிப் பொருள்களே. நாம் எவ்வளவுக்கு இதை மறக்காமல் இருக்கின்றோமோ அதுவரை மட்டுமே நாம் முக்கியமானவர்கள். ஓ, அவரைப் பார், இவரைப் பார், இந்த ஆயரைப் பார், இவர் ஆயராகப் பதவி உயர்வு பெற்றுவிட்டார் என்று சொல்வது, நினைப்பது குறித்து எச்சரிக்கையாக இருங்கள். இவ்வாறு நாம் பேசினால், அன்னை மரியாவின் எடுத்துக்காட்டைப் பின்செல்வதிலிருந்து சிறிது சிறிதாக விலகிச் செல்கிறோம். ஒரு குருவோ, ஓர் அருள்சகோதரியோ தனது தாய் மொழியைக் கைவிடுவது, குறிப்பாக, ஈக்குவதோரின் பல்வேறு கலாச்சாரத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பூர்வீக இன மொழிகள் பேசப்படும் இடத்தில் தாய் மொழியைக் கைவிடுவது வருந்தத்தக்கது. ஒரு குருவோ, ஓர் அருள்சகோதரியோ தனது சொந்த தாய்மொழியை மறக்கும்போது அல்லது அதைப் பேச விரும்பாதபோது தான் எங்கிருந்து வந்தவர் என்ற தனது மூலத்தை மறக்கிறார் என்று அர்த்தமாகும். ஒரு குருவோ அல்லது ஒரு குருத்துவ மாணவரோ தனது வாழ்வுப்பணி பற்றி அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கும்போது அவர் ஆன்மீக Alzheimer மறதி நோயினால் துன்புறத் தொடங்கிவிட்டார் என்றும், அவர் எங்கிருந்து வந்தார் என்ற நினைவை இழந்து அதை மறக்கத் தொடங்குகிறார் என்றும் அர்த்தம், பதவி ஆசை ஆன்மீக Alzheimer நோய்க்கு இட்டுச் செல்லும் என்றும் எச்சரித்த திருத்தந்தை, அருள்பணியாளர், அருள்சகோதரிகளின் வாழ்வு பணி செய்வதாகும். இறைவன் பணிசெய்வதற்காகவே உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார், பணி என்பது, எனக்காக, எனது நேரத்திற்காக, எனது பொருள்களுக்காக அல்ல, பிறருக்காக ஆற்றுவதாகும் என்று கூறினார்.

இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் எனது அலுவலகம் மூடப்பட்டிருக்கும், நான் களைப்பாக இருக்கிறேன், அதனால் வீடு மந்திரிக்க வர முடியாது என்று சொல்லும் அருள்பணியாளரும், தொலைக்காட்சியில் அந்த விளம்பர நிகழ்ச்சி இருக்கிறது என்று சொல்லும் அருள்சகோதரியும் பிறருக்காகப் பணி செய்பவர் அல்ல. இவையெல்லாம் எடுத்துக்காட்டுகளே. பணி என்பது, களைப்பாக இருக்கும்போதும்கூட நாம் ஆற்றவேண்டியதை ஆற்றுவதாகும். மக்கள் உங்களை எரிச்சலூட்டும்போதும்கூட, பணி என்பது பிறருக்காக நம்மை அர்ப்பணிப்பதாகும். இலவசமாகப் பெற்ற அருளுக்காக தயவுகூர்ந்து வெகுமதி கேட்காதீர்கள். உங்களின் மேய்ப்புப்பணி இலவசக் கொடையாக இருக்கட்டும். தங்களின் இலவசக் கொடையை வாழ்கின்ற, தனது மூலத்தை நினைவில் வைத்துள்ள அர்ப்பணிக்கப்பட்ட மனிதர், அவரது மகிழ்வால் நினைவுகூரப்படுவார். மகிழ்வு, இயேசு வழங்கும் கொடை. நாம் அதைக் கேட்டால் அவர் நமக்குக் கொடுப்பார். நாம் பிறரைவிட அதிக முக்கியமானவர்கள் என்று ஒருபோதும் நினைக்காதிருக்க, நம் மூலத்தை மறவாமல் இருக்க, இலவசமாகப் பெற்றுள்ள கொடையை வாழ்வதற்கு நாம் செபிக்க வேண்டும். பணியாற்றுவதில் உறுதியாயிருங்கள், மகிழ்வோடு நற்செய்தி அறிவியுங்கள், பொதுமக்களின் பக்தியை ஊக்கப்படுத்தி, பாதுகாத்து அதனை வழிநடத்துங்கள்.... எனக்காகச் செபிக்க மறவாதீர்கள்.  இவ்வாறு ஈக்குவதோர் El Quinche தேசிய அன்னைமரியா திருத்தலத்தில், அந்நாட்டின் குருக்கள், துறவியர் மற்றும் குருத்துவ மாணவர்களிடம் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.