2015-07-08 16:50:00

திருத்தந்தை-சமுதாயத்தை உங்கள் குடும்பம் போல அன்பு கூருங்கள்


ஜூலை,08,2015. ஈக்குவதோர் நாட்டின் அரசியல் மற்றும் சமூகக் கொள்கை அமைப்பாளர்களை கிட்டோ புனித பிரான்சிஸ் பேராலயத்தில் இச்செவ்வாய் இரவு 8 மணிக்குச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருமைப்பாட்டுணர்வுக்கும், உள்ளூர் அமைப்புக்கும் குடும்பத்தைத் தங்களின் முன்மாதிரிகையாக கொள்ளுமாறும், சமுதாயத்தை உங்கள் குடும்பம் போன்று அன்பு கூருங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். வீடுகளில் கற்பிக்கப்பட வேண்டிய, கைம்மாறு கருதாத தன்மை (இலவசமாகப் பெற்றுக்கொண்டீர்கள், இலவசமாகக் கொடுங்கள்) ஒருமைப்பாடு, உள்ளூர் அமைப்புமுறை ஆகிய மூன்று சமூக விழுமியங்கள் அல்லது சமூகக் கோட்பாடுகள் பற்றிப் பேசினார் திருத்தந்தை.

ஒரு குடும்பத்தில், பெற்றோரும், தாத்தா பாட்டிமாரும், குழந்தைகளும், சொந்தம் என்று  உணர்கின்றனர், அதில் யாரும் புறக்கணிக்கப்டுவதில்லை, இந்நிலை சமுதாயத்திலும் நிலவ வேண்டாமா? அரசியல் தளத்தில் உருவாக்கப்படும் திட்டங்கள், பொதுவான நலனுக்காக ஒன்றுசேர்ந்து உழைப்பதைவிட பிறரைத் தவிர்த்து நடக்கும் ஆவலைக் காட்டுவதாகவே உள்ளது. நான் பிறரின் விருப்பத்தையும் தாண்டி, எனது விருப்பத்தை அவர்மீது திணித்தால் எனது பதவியும், எனது கருத்துகளும், எனது திட்டங்களும் முன்னோக்கிச் செல்லும் என்ற நிலை அரசியலில் உள்ளது. குடும்பம் இந்த வழியிலா செல்கிறது? ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவரும் பொதுவான நோக்கத்திற்காகத் தங்களின் பங்கை அளிக்கின்றனர். ஒவ்வொருவரின் தனித்துவத்தை மறுக்காமல், அதேவேளை ஊக்கப்படுத்தி ஆதரவளித்து ஒவ்வொருவரும் பொது நன்மைக்காக வேலை செய்கின்றனர். குடும்ப வாழ்வில் கற்றுக்கொள்ளப்படும் அன்பு, உடன்பிறப்பு உணர்வு, ஒருவர் ஒருவரை மதித்தல் போன்ற விழுமியங்கள், சமூக வாழ்வில் கைம்மாறு கருதாத தன்மை, ஒருமைப்பாடு, உள்ளூர் அமைப்புமுறை ஆகியவை மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும் மற்றும் வெளிப்படுத்தப்பட முடியும். அரசியல் மற்றும் சமூகச் சட்ட அமைப்பாளர்கள் தங்களின் அன்பை, குழுவுக்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் வார்த்தைகளால் அல்ல, செயல்களால் வெளிப்படுத்த வேண்டும். நாம் யார், நம்மிடம் இருப்பவை.. இவையனைத்தும் பிறரின் பணிக்காக வழங்கப்பட்டவை. அவை, நற்பணிகளில் கனிதரச் செய்வதே நம் கடமை. மலைகளையும், கடற்கரைப் பகுதிகளையும், Galapagos தீவுகளையும் கொண்டிருக்கும் ஈக்குவதோரிலுள்ள சிறந்த சுற்றுச்சூழல் பன்மைத்தன்மையைப் பாதுகாப்பதில் நன்மதிப்பையும், ஒருமைப்பாட்டையும் காட்டுங்கள். ஈக்குவதோரில் மிகுதியாகக் காணப்படும் இயற்கை வளங்கள், குறைந்தகால ஆதாயங்களுக்கென நோக்கப்படக் கூடாது. நாம் பெற்றுள்ள இந்த வளங்களின் கண்காணிப்பாளர்களாக, சமுதாயத்திற்கும், வருங்காலத் தலைமுறைகளுக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். தங்களின் சொந்தக் குடும்பங்களில் பொறுப்புகளை உணர்வதுபோல, சமுதாயத்தின் உறுப்பினர்கள் மற்றும், வருங்காலத் தலைமுறைகள் மீதும் பொறுப்புகள் உள்ளவர்களாக உணர வேண்டும். நல்லதோர் எதிர்காலத்தில் வைத்துள்ள நம்பிக்கை மக்களுக்கு, குறிப்பாக, இளையோர்க்கு உண்மையான வாய்ப்புக்களை வழங்கட்டும். பொதுநலனுக்கான முயற்சிகளில் திருஅவை ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது. நல்ல விழுமியங்களை நடைமுறைப்படுத்த அரசியல் மற்றும் பொதுத்துறைப் பணியாளர்க்கு நம் ஆண்டவர் அருள் பொழிவாராக... என்று சொல்லி, அரசியல் மற்றும் சமூகக் கொள்கை அமைப்பாளர்களுக்குத் தான் வழங்கிய உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.      

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.